===க.சுவாமிநாதன்====                                                                                                                                             ஏடிஎம்கள் வறண்டு போய்விட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 2017 நவம்பரில் “செல்லாப்பண நடவடிக்கை” மேற்கொள்ளப்பட்டபோது முதலில் “கறுப்புப் பண ஒழிப்பே” லட்சியமென பேசப்பட்டது. பிறகு “காசற்ற பொருளாதாரமும்” (CASHLESS ECONOMY) இலக்காகக் கூறப்பட்டது. ஆனால் ஏடிஎம்களின் முகப்பு வெளிப்படுத்தும் வறண்ட சிரிப்பு மேற்கூறிய இரண்டு நோக்கங்களையும் இன்று கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து இந்து பிசினஸ் லைன் – ஏப்ரல் 19, 2018ன் தலையங்கம் தருகிற செய்தி முக்கியமானது. அதன் சாரம் கீழே…

ஏடிஎம்களின் வறட்சி தற்காலிகமானதுதான். அதனை விரைவில் சரிசெய்து விடுவோம் என்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மறுபடியும் மறுபடியும் உறுதியளித்து வருகிறார். எனினும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இப்பிரச்சனை மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. காரணம் 17 மாதங்களுக்கு முன்பாக செல்லாப் பண நடவடிக்கையால் அலைக்கழிக்கப்பட்ட அனுபவமே.பல மாநிலங்களில் பல பகுதிகளில் ஏடிஎம்கள் விற்றுப் போய்க் காட்சியளிக்கின்றன. வங்கிகள் ஏதும் செய்ய இயலாமல் கைகளைப் பிசைகின்றன. அண்மை மாதங்களில் உயர்மதிப்பு கரன்சியான ரூ.2000ன் வரத்தை ரிசர்வ் வங்கி வெகுவாக குறைத்துவிட்டது. நிறைய கதைகள் – சதிக் கதைகள் உள்ளிட்டவை உலா வருகின்றன.

பற்றாக்குறை பணச்சுற்று : பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கையொன்று, ரூ.70,000 கோடி அளவில் பற்றாக்குறை பணச்சுற்றில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நடப்பு வளர்ச்சி விகிதங்களோடு ஒப்பிடுகையில், ரூ.19.1 லட்சம் கோடி பணம் சுற்றில் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ ரூ.18.42 லட்சம் கோடிகள்தான். செல்லாப்பண நடவடிக்கை இருந்தபோது புழக்கத்தில் இருந்த பணத்தைவிட தற்போது அதிகமாகச் சுற்றில் இருந்தாலும் பொருளாதார வளர்ச்சிக்கேற்ற அளவுக்கு இல்லை.

அசல் தேவையும், அச்சடிப்பும்…
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ரூ.2000 நோட்டுக்களை அச்சடித்து, சுற்றுக்கு விடுவதை குறைத்திருக்கிறது. பொருளாதார விவகாரங்களின் செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் ரூ.6.7லட்சம் கோடிகள் பெறுமான ரூ.2000 நோட்டுகள் சுற்றில் உள்ளதாகவும் அதனால் அச்சடிப்பை நிறுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.ஆனால் பணத்திற்கான அசல் தேவை வழக்கத்தைக் காட்டிலும் வெகுவாக உயர்ந்துள்ளன. ஒரு மாதத்திற்கான பணச்சுற்றின் தேவை இரண்டு மாதங்களுக்கு முன்பு சராசரியாக 20,000 கோடிகளாக இருந்தன. அது தற்போது ரூ.45,000 கோடிகளாக உயர்ந்திருக்கிறது என்றும் கார்க் கூறியுள்ளார். எனவே பணச்சுற்றிற்கும், அசல் தேவைக்குமான இடைவெளி அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் கேள்வி என்னவெனில் எதனால் அசல் தேவை அதிகரித்திருக்கிறது?

கறுப்பும், கர்நாடகாவும்…
இங்குதான் கருந்துளைக்குள்(BLACK HOLE) நம்மை இழுக்கிற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ரூ.2000 நோட்டுகள் பதுக்கப்பட்டுள்ளன; கர்நாடகா தேர்தல்களை நோக்கி பாய்ந்துள்ளது; கல்யாண காலம்; கொள்முதல் பருவம்; பீதியால் மக்கள் பணத்தை எடுக்கிறார்கள் என்றெல்லாம் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இக்காரணங்களில் கர்நாடகா தேர்தல்களே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.தேர்தல் நேரங்களில்லாம் இப்படிப் பணச்சுற்றின் போக்கு இருப்பது நாம் கண்டு வருவதே. ஆனால் பதுக்கப்படுகிறது என்ற காரணம் ஒரு முரண்பாட்டை முன்னிறுத்துகிறது. ரூ.1000, ரூ.500 ஆகிய உயர் மதிப்பு நோட்டுகளே பதுக்கலுக்கு ஏதுவாக உள்ளன என்பதே செல்லாப்பண நடவடிக்கையின் போது சொல்லப்பட்டது. இப்போது ரூ.2000 என உயர்மதிப்பு நோட்டை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக பதுக்கலை மத்திய அரசு எளிதாக்கியிருக்கிறது. ரூ.2000 நோட்டிற்கு பதுக்கல்காரர்கள் நன்றிக்குரியவர்கள்.

கேள்விக்குறிகள் நிமிருமா?
தற்போது மத்திய அரசு இரண்டு முனைகளில் செயல்பட வேண்டியுள்ளது. ஒன்று, குறையும் பாக்கெட்டுகளில் பணத்தைப் போட வேண்டும். அதற்கான வேலைகளை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளதாகத் தெரிகிறது. பொருளாதார வளர்ச்சிக்கான பணத்தேவையில் பள்ளம் விழுவது உண்மையானால் அதற்கான காரணிகளை அரசு ஆராய வேண்டும்.

ஏடிஎம் எண்ணிக்கையில் சரிவு
மார்ச் 2017ல் 1,48,398 ஏடிஎம்களை அரசு வங்கிகள் வைத்திருந்தன. டிசம்பர் 2017ல் இது 1,46,301 ஆகக் குறைந்துள்ளது. செப்டம்பர் 2016க்கும் டிசம்பர் 2017க்கும் இடையில் மூடப்பட்ட கிராமப்புற ஏடிஎம்கள் 1000க்கும் அதிகம். மொத்தம் மூடப்பட்டுள்ளவை 2100. ஏடிஎம்கள் இருந்தாலும் பணம் இருக்க வேண்டுமே!

கார்டு இங்கே! கதவு எங்கே!
மார்ச் 2017க்கும் பிப்ரவரி 2018க்கும் இடையில் வங்கிகள் 8.5 கோடி டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு தந்துள்ளன. 3000 கார்டுகளுக்கு ஒரு ஏடிஎம் என்றால் கூட 30,000 ஏடிஎம்களைத் திறந்து இருக்க வேண்டும். கார்டுகளை கைகளில் வைத்துக் கொண்டு காசில்லாமல் அலைய விடுகிறார்கள்.
ஆதாரம்: இந்து பிசினஸ் லைன்(19.4.2018)

Leave A Reply

%d bloggers like this: