மன்னார்குடி ஏப் 19

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும்  உறுப்பினர் தோழர் எஸ்எம் தங்கவேலு 18..4.2018 பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 95.  கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் குன்றியிருந்த அவர் புதன் (18.4.2018) இரவு 8 மணி அளவில் மன்னார்குடி ஒன்றியம் பரவாக்கோட்டையில் காலமானார். அவரது  எஸ்எம்டி. சந்திரசேகரன் எஸ்எம்டி வீரசிங்கம் மற்றும் சுமதி செல்வி இரண்டு மகன்கள் மகள்கள் உள்ளனர். தோழர் எஸ்எம்டி இரண்டு வயது குழந்தையாக இருந்தபோது 1925 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மலேயாவிற்கு சென்றது. அங்கு தனது 15வது வயதில் மலேயாவில் கம்யூனிச இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு  கம்யூனிச குழுக்களில் ரகசியமாக செயல்பட்டார். தனது 20வது வயதில் மலேயா காவல்துறையால் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். தனது சொந்த ஊரான பரவாக்கோட்டைக்கு வந்த தோழர் எஸ்எம் தங்கவேலு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியின் அனைத்துப் போராட்டங்களிலும் இயக்கங்களிலும்  முழுமனதுடன் பங்கேற்றிருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தோன்றிய பிறகு  விவசாயிகள் சங்கம் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொறுப்புகளிலும் திறம்பட செயலாற்றினார். மங்கா புன்னகை இழையோடும் முகத்துடன் எவரிடமும் எளிமையாகவும் இனிமையாகவும்  பழகும் எஸ்எம்டி என்றழைக்கப்படும் தோழர் தங்கவேலு 15 வயது முதல் 80 ஆண்டுகளாக கம்யூனிச இயக்கத்தில் இணைத்துக் கொண்ட மாவட்டத்தின் வயது முதிர்ந்த தோழராவார். இவர் தியாகி இரணியனுடன் நெருங்கிப்பழகி வந்தார். எஸ்எம்டி உள்பட இரணியனின் நெருங்கிய சகாக்கள் பரவாக்கோட்டையில் இருந்ததால்தான் பரவாக்கோட்டைக்கு தலைமறைவாக வரும்போது இரணியன் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தோழர் எஸ்எம்டியின் மறைவு செய்தி அறிந்து   கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஎஸ் கலியபெருமாள்,ஆகியோர் மாவட்டக்குழு உறுப்பினர் டி. சந்திரா, ஒன்றிய செயலாளர் எம்.திருஞானம், நகர செயலாளர் எஸ். ஆறுமுகம். கே.டி. கந்தசாமி, டி. பன்னீர்செல்வம், ஏ. தங்கவேலு, எம்.சிராஜுதீன், மார்க்ஸ். ராமலிங்கம், ப. தெட்சிணாமூர்த்தி உள்பட ஒன்றிய நகரக் குழுமிட்டி உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் உறுப்பினர்கள் பரவாக்கோட்டை மதுக்கூர் சாலையிலிருந்து கட்சியின் செங்கொடி ஏந்தி ஊர்வலாக வந்து  அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவரது உடலுக்கு மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி்னர் வி.எஸ்.கலியபெருமாள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். சிபிஐ யிலிருந்து எஸ்.ஆர். திரவியம், டி.கே.பி. லெனின், காங்கிரசிலிருந்து எஸ்பிசெல்வேந்திரன்,  அம்மா பேரவை மாவட்ட செயலாளர்  பொன் வாசுகிராம், கூட்டுறவு நாணக சங்கத் தலைவர் சத்தியராஜன், மற்றும் கிராம மக்கள் ஆயிரக்கணக்னானோர் மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: