திண்டுக்கல், ஏப்.19
திண்டுக்கல் மலைக்கோட்டையில் கி.மு. 3ம் நூற்றாண்டில் செழித்தோங்கி இருந்த சமணத்தின் மீது கி.பி. 8ம் நூற்றாண்டில் சைவம் நடத்திய தாக்குதலின் எச்சங்கள் இங்கு உள்ளன. உளிகொண்டு சமணப்படுக்கைகள் சிதைக்கப்பட்டு உள்ளன. இதனை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்தார்கள். அது பற்றிய விவரம் வருமாறு.
திண்டுக்கல் மலைக்கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. திண்டுக்கல் மலைக்கோட்டை மற்றும் அடிவாரப்பகுதிகளில் சைவம், வைணவம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய அனைத்து மதங்களும் செழித்து வளர்ந்திருக்கின்றன என்பதை இங்குள்ள கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளின் வாயிலாக அறிய முடிகிறது. எனினும் திண்டுக்கல்லில் ஏறக்குறைய 2200 ஆண்டுகளுக்கு முன்பாகவே சமணம் மிகவும் செல்வாக்குடன் விளங்கியது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. கி.மு.3ம் நுற்றாண்டில் இங்கு சமணம் செழித்து வளர்ந்திருந்தது. என்பதற்கு அடையாளமாக இன்றளவும் சாட்சியாக விளங்கும் சமண கல் ;படுகைகளை ஒரு சில ஆய்வாளர்கள் ஆய்ந்திருக்கிறார்கள். அந்த சமணப்படுகைகள் மிகவும் சிதைவுற்று அழியும் நிலையில் உள்ளன என்பதை அறிந்து அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், மறு ஆய்வு செய்யவும், திண்டுக்கல் இல.முருகேசன் விடுத்த வேண்டுகோளை ஏற்று தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவன ஆய்வு மாணவர்கள் ஜெரால்டு மில்லர், ஞானபாலன், ஜான்சன், செல்வராஜ், அருண், மற்றும் பேராசிரியர்கள் அசோகன், கன்னிமுத்து, ஆகியோர் தொல்லியல் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வுகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் அசோகன், கன்னிமுத்து ஆகியோர் இது குறித்து தங்களது வேதனையை தெரிவித்தனர்.
திண்டுக்கல் மலைக்கோட்டையில் தென்மேற்கு மூலையில் ஒரு குகை உள்ளது. இந்த குகையில் தான் கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்படுக்கைகள் காணப்படுகின்றன. இந்த சமணப்படுகைகள் சமூகவிரோதிகளால் சிதைக்கப்பட்டும், குப்பைக்கூளங்களாலும் மூடப்பட்டுக்கிடந்த இந்த சமணப்படுகைகளை நாங்கள் சுத்தம் செய்தோம். குகைக்குள் மொத்தம் 20 சமணப்படுகைகள் உள்ளன. ஒரு சில படுகைகளில் தலையணை அமைப்புகள் உள்ளன.மற்றவை பளபளப்பான படுக்கைகளான உள்ளன. குகைக்கு வெளியே ஓய்வு நேரங்களில் அமர்ந்து வெளி உலகை வேடிக்கை பார்க்க வசதியாக 4 அமர் படுக்கைகள் சமண துறவிகளுக்காக வடிக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 24 சமண கலப்படுக்கைகள் உள்ளன என்பது தரியவருகிறது. சரியான பாதுகாப்பு இல்லாததால் இந்த சமணப்படுக்கைகள் தற்காலத்தில் சிலர் சிதைத்தும், சிலர் தங்கள் பெயர்களை அதில் பொறித்தும் நாட்டின் பொக்கிஷங்களான இந்த சமணப்படுகைகளை அலங்கோலப்படுத்தி உள்ளனர். குகைகளுக்கு உள்ளேயும், குகை தளத்தின் மேல் பரப்பிலும் பல்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த ஆடுபுலியாட்டம், கல்லாங்குழி, தாயம், பெயர் தெரியாத விளையாட்டுக் கட்டங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. குகைளில் மலைக்காலத்தில் தண்ணீர் வராமலிருக்க கி.மு. 3ம் நூற்றாண்டு காலத்திலேயே கல்வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கி.மு. 3ம் நூற்றாண்டில் தொடங்கி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் செழித்து வளர்ந்த சமணம் கி.பி. 7 மற்றும் கி.பி.8ம் நூற்றாண்டில் எழுந்த சைவ, வைணவ மார்க்க எழுச்சியின் காரணமாக சமணம் இங்கும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது என்பதை இங்குள்ள சில தொன்மை அடையாளங்களை நாம் பார்க்க முடிகிறது.
தாக்குதலுக்கு பிறக திண்டுக்கல் தேவார வைப்புத் தளமாக மாற்றப்பட்டது என்ற ஒரு செய்தியை உறுதிப்படுத்தும் விதமாகவும், சைவம் இங்கு சமணத்தை அழித்து ஒழித்து வெற்றி பெற்று சைவ சமய எழுச்சியை ஏற்படுத்தியது என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும் இங்குள்ள சமணப்படுகைகளின் தலைமாட்டில் 3 சைவக்குறிகள் வரையப்பட்டுள்ளன. சிவனின் அடையாளமான திரிசூலத்துடன் கூடிய உடுக்கை வெள்ளை ஓவியமாக 2 சமணப்படுக்கைகளின் மேலும், இதே திரிசூல உடுக்கை கோட்டுருவாக இன்னொரு சமணப்படுக்கையில் தலைமாட்டிலும் பொறிக்கப்பட்டிருப்பதை நாங்கள் புதிதாக கண்டறிந்தோம். படுக்கைகள் மீது உளி கொண்டு உடைத்து உள்ளனர். குகையின் மேற்கூரையையும் உளி கொண்டு உடைத்து தள்ளியள்ளனர். இதனால் குகை முழுவதும் அடைபட்டு கிடக்கிறது. கொங்கர்பள்ளிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் படுக்கைகள் உள்ள இடமாக திண்டுக்கல் மலைக்கோட்டை விளங்குகிறது. குகைக்கு மேல் பகுதியில் நீர்த்தேக்கம் அமைந்து இந்த பகுதி ஒரு சோலையை போல காட்சி அளித்துள்ளது என்பதும் தெரியவருகிறது. ஆகவே திண்டுக்கல்லில் கி.பி. 8ம் நூற்றாண்டு அளவில் சமணம் முற்றிலும் அழித்தொழிக்ப்பட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த திண்டுக்கல் சமணப்படுக்கைகள் நமது நாட்டின் பாரம்பரியச் சின்னங்கள். இவை போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். அரசும் தொல்லியல் துறையும் முன் வந்து இந்த சமண குகையை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து சுற்றிலும் கம்பி வேலி அமைப்பை ஏற்படுத்தி பாதுகாக்க முன்வர வேண்டும். அத்துடன் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் ஏறுவதற்கு மிகவும் கடினமாகவும், வழுக்கலான பாறை பாதையையும் கொண்ட குகைக்கு செல்லும் வழியில் ஒரு கைப்பிடி கம்பி அமைத்து படிக்கட்டுக்களை ஏற்படுத்தினால் பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை பார்வையிட வசதியாக இருக்கும். இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள். (நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.