தாராபுரம்,
தாராபுரம் நகரில் கிராவல் மண் கடத்திய லாரியை உதவி ஆய்வாளர் பிடித்து வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தார்.

தாராபுரம் அலங்கியம் ரோடு ராம்நகரில் உதவி ஆய்வாளர் தனபாலன் செவ்வாயன்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிராவல் மண் லோடு ஏற்றிய லாரி ஒன்று வந்தது. லாரியை சோதனை செய்தபோது காலாவதியான அனுமதி இருந்தது. இதையடுத்து விசாரணை மேற்கொண்டபோது லாரி தாராபுரத்தை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. காலாவதியான அனுமதியை வைத்து கிராவல் மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து உதவி ஆய்வாளர் தனபாலன் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தார். வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தாராபுரம் பகுதியில் சமீபகாலமாக அமராவதி ஆற்றில் இருந்து மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அமராவதி ஆறு பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தாராபுரத்தை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கிராவல் மண் எடுக்க தடை இருந்தும் கிராவல் மண் கடத்துவது அதிகரித்துள்ளது. இதற்கு அரசு அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் உடந்தையாக உள்ளனர் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். செவ்வாயன்று இரவு கிராவல் மண் கடத்தி வந்த லாரியை உதவி ஆய்வாளர் தனபாலன் பறிமுதல் செய்தார். அப்போது லாரி உரிமையாளர் தரப்பில் இருந்து ஆளும் கட்சியினரின் அதிகார துணையுடன் லாரியை விடுவிக்க முயற்சிகள் மேற்க்கொண்டனர். ஆனால் அங்கு சில ஊடகத்தை சேர்ந்தவர்கள் வந்த நிலையில், அவர்களையும் கவனிப்பதாக லாரி உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சிலர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் கிராவல் கடத்தி வந்த லாரியை வருவாய்த்துறையினரிடம் முறைப்படி ஒப்படைத்துள்ளார். இதை லாரியில் வந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வாட் சப்பில் உலவவிட்டுள்ளார். தாராபுரம் பகுதியில் ஆற்றுமணல் மற்றும் கிராவல் மண் கடத்துவது அதிகரித்திருப்பதும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: