முகமது அமீன் நகர் (ஹைதராபாத்):
இந்திய உழைப்பாளி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு வீரஞ்செறிந்த போராட்டப் பாரம்பரியம் மிக்க தெலுங்கானா மாநிலத் தலைநகரம் ஹைதராபாத் நகரில் ஏப். 18ஆம் தேதி புதன்கிழமை எழுச்சியோடும் உற்சாகத்தோடும் தொடங்கியது.
இம்மாநாடு நடைபெறும் முகமது அமீன் நகர் மிகச்சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு செம்மயமாகக் காட்சியளித்தது. தொடக்க விழா நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆயுதந்தாங்கிய மக்கள் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்ற மகத்தான போராளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மல்லு சுவராஜ்யம் 22ஆவது மாநாட்டுச் செங்கொடியை ஏற்றி வைத்தார். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள், பார்வையாளர்கள் மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தோர் பெருந்திரளானோர் அங்கு கூடி நின்று முழக்கமிட்டனர்.
இதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் உள்பட பிரதிநிதிகள் மற்றும் அங்கு வந்திருந்த அனைவரும் தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காலஞ்சென்ற தலைவர்கள் ககேன்தாஸ், சுகுமால் சென் ஆகியோர் பெயரிடப்பட்ட அரங்கில் பொது மாநாடு நடைபெற்றது.

பொது மாநாடு
கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் இம்மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். முதலில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை மாணிக் சர்க்கார் முன்மொழிந்தார். அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன் தொடர்ச்சியாக, தெலுங்கானா மக்கள் கலைக்குழுவின் புரட்சிகரப் பாடல் இசைக்கப்பட்டது. மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பி.வி.ராகவலு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மாநாட்டுத் தொடக்க உரை ஆற்றினார்.

இடதுசாரி தலைவர்கள் வாழ்த்துரை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மத்தியக்குழுச் செயலாளர் பி.ஆர்.சிவசங்கர், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் மனோஜ் பட்டாச்சார்யா, எஸ்யூசிஐ(சி) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஆசித் பட்டாச்சார்யா ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.மாநாட்டுத் தலைவர் மாணிக் சர்க்கார் தலைமை உரையாற்றினார்.இதைத் தொடர்ந்து பொது மாநாட்டு நிகழ்வுகள் நிறைவடைந்தது. பிற்பகல் பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது.அரசியல் நகல் தீர்மானத்தை முன்வைத்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் உரையாற்றினர்.மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டுக்குப் பிறகு கடந்த மூன்றாண்டு காலத்தில் உயிர் நீத்த தலைவர்கள், தியாகிகளுக்கு இம்மாநாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது அமீன், மத்தியக்குழு உறுப்பினர் ககேன்தாஸ், மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவராக செயல்பட்ட சுகுமால் சென், மத்தியக்குழு உறுப்பினர் நூருல் ஹூடா, முன்னாள் மத்தியக்குழு உறுப்பினர் சுபோத் மேத்தா மற்றும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த தோழர் ஆர்.கோவிந்தராஜன் மறைவுக்கும் மாநாடு அஞ்சலி செலுத்தியது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.உலக அளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சோசலிச முற்போக்கு சக்திகளுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த கியூபா புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு மாநாடு அஞ்சலி செலுத்தியது.

கடந்த மாநாட்டுக்குப் பிந்தைய காலத்தில் இந்துத்துவ மதவெறி சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர் மறைவுக்கும், பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கும் இந்த மாநாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது.மாநாட்டுக்குத் தலைமை வகித்த மாணிக் சர்க்கார் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிய அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.மாநாட்டு மேடையில் ஹைதராபாத்தின் புகழ் மிக்க சார்மினார் (நான்கு கோபுர) வடிவத்தில் ஒலி பெருக்கி மேடை அழகாக அமைக்கப்பட்டு இருந்தது பார்வையாளர்களை ஈர்த்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.