ஜம்மு:
ஜம்மு – காஷ்மீர் மாநில துணை முதல்வர் உட்பட பாஜக-வின் 9 அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளை பாதுகாக்கும் விதமாகவும், மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவும் பாஜக-வினர் இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளனர்.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆர்எஸ்எஸ்- பாஜக பிரமுகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனை மறுத்த அவர்கள், மறுபுறத்தில் தங்களுக்கு எதிரான தடயங்களை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும், காஷ்மீர் மாநில காவல்துறையினர் உண்மையை வெளிக்கொண்டு வந்து, குற்றத்தில் ஈடுபட்ட 3 போலீசார் உட்பட 8 பேரையும் கைது செய்தனர். அத்துடன் வலுவான குற்றப்பத்திரிகையையும் மாநில போலீசார் தாக்கல் செய்தனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநில அரசில் பாஜக-வும் இடம்பெற்றுள்ள நிலையில், தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதை பாஜக-வினரால் சகிக்க முடியவில்லை. அவர்கள், குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி பேரணி நடத்தினர். மாநில பாஜக அமைச்சர்கள் இருவரும் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

ஆனால், இது எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான மெகபூபா முப்தி, பாஜக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன. பாஜக கட்சியோ, தானாகவே முன்வந்து, பேரணியில் கலந்துகொண்ட அமைச்சர்கள் சந்திர பிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டது.
இதனிடையே, 2 அமைச்சர்கள் மட்டுமல்லாது, ஜம்மு – காஷ்மீர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள துணை முதல்வர் உட்பட அனைத்து பாஜக அமைச்சர்களையும் உடனடியாக ராஜினாமா செய்யுமாறு பாஜக மேலிடம் திடீர் உத்தரவை பிறப்பித்தது. அதன்பேரில், பாஜகவின் 9 அமைச்சர்க்ளும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளன்ர. தங்களின் ராஜினாமா கடிதங்களை பாஜக மாநிலத் தலைவர் சத் சர்மாவிடம் அளித்துள்ளனர்.
மெகபூபா முப்தி அரசை மிரட்டும் வகையில் இவ்வேலையில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.