===எம்.கண்ணன், என்.ராஜேந்திரன்====
தொழில்நுட்ப சிக்கல்களைக் களைவதற்கும், கணினி குறித்த பாடத்தை செயல்முறையுடன் விளக்கவும் இன்னும் பல வகையான தேவைகளுக்கு பயன்படுவது திரையை வீடியோவாக பதிவு செய்யும் மென்பொருள்கள். முன்பு இருந்ததை விட இப்போது நல்ல முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன இவ்வகை மென்பொருள்கள். அவற்றில் சிலவற்றைப் பற்றி இவ்வாரம் அறிந்து கொள்வோம்.

நெக்ஸ்ஷாட் (NexShot)
தேவைப்படக்கூடிய திரைப் பகுதியை மட்டும் விரைவாக ரெக்கார்ட் செய்து தரக்கூடிய மற்றொரு மென்பொருள். இம்மென்பொருளில் உருவாக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களை பல்வேறு இணைய தளங்களில் எளிதாக பகிரமுடியும்.பதிவு செய்த வீடியோவை நேரடியாக எடிட் செய்யும் வசதியைத் தருகிறது. ஸ்கிரீன் ஷாட்களாக எடுக்கப்படும் படங்களை PNG, BMP மற்றும் JPG ஃபார்மட் கோப்புகளாக சேவ் செய்து கொள்ளலாம். இம்மென்பொருள் பற்றி மேலும் விபரம் அறிய, டவுன்லோட் செய்ய https://nexshot.io/ என்ற தளத்தில் நுழையவும்.

கேம்ஸ்டுடியோ (CamStudio)
இம்மென்பொருள் ஓப்பன் சோர்ஸ் வகை சார்ந்தது. வணிக மென்பொருளுக்கு நிகராக பல்வேறு வசதிகளைத் தருகிறது. பிரபலமான AVI மற்றும் SWF வகை வீடியோ கோப்பாக பதிவு செய்யக்கூடியது. பதிவு செய்ய வேண்டிய ஸ்கிரீனின் அளவை நம் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளும் வசதி, மௌஸ் கர்சரை செயல்படுத்துவது (Enable) அல்லது நிறுத்துவது (Disable) செய்யும் வசதி, மைக்ரோ போன் அல்லது இம்மென்பொருள் வழியாக ஒலியை பதிவு செய்யும் வசதி எனப் பல்வேறு வசதிகளைத் தருகிறது கேம்ஸ்டுடியோ . இம்மென்பொருளை டவுன்லோட் செய்யவேண்டிய முகவரி:http://camstudio.org/

EZVID
விண்டோஸ் எக்ஸ்பி முதல் 10 வரையிலான அனைத்து இயங்குதளங்களிலும் செயல்படக்கூடிய இலவச மென்பொருள். ஸ்கிரீனில் வரைந்து காட்டலாம், ரெக்கார்ட் செய்த வீடியோவில் டெக்ஸ்ட் இணைத்தல், எடிட்டிங் வேலைகளையும் செய்து கொள்ளலாம்.வீடியோ வேகத்தைக் கட்டுப்படுத்துதல், ஸ்லைட்ஷோ உருவாக்குதல், யுடியூப் தளத்திற்கு அப்லோட் செய்யும் வசதி எனப் பல வசதிகளைத் தருகிறது. இந்த மென்பொருளைப் பற்றி மேலும் விபரங்களை அறிந்து கொள்ளவும் டவுன்லோட் செய்யவும் நுழைய வேண்டிய தளம்:https://www.ezvid.com

 

விஎல்சி மீடியா பிளேயர்(VLC)
இங்குள்ள எந்த மென்பொருளும் பதிவிறக்காமல் நம் கணினியில் உள்ள விஎல்சி மீடியா பிளேயர் மூலமாகவேகூட ஸ்கிரீனை ரெக்கார்ட் செய்யமுடியும். இதை எப்படி செய்வது என்கிறீர்களா? முதலில் VLC மீடியா பிளேயரைத் திறந்து கொள்ளுங்கள்.அதில் Menu என்பதைக் கிளிக் செய்தால் வரும் பட்டியலில் கீழே Convert & Save என்றிருப்பதை தேர்வு செய்யவும்.Open Media என்ற விண்டோ திறக்கும். அதில் உள்ள நான்கு டேப் வசதிகளில் நான்காவதாக உள்ள Capture Device என்பதைத் தேர்வு செய்யவும்.

அதில் முதலாவது காம்போ பாக்ஸில் Desktop என்பதைத் தேர்வு செய்யவும். இப்போது எத்தனை ஃப்ரேம்கள் என்பதில் குறைந்த பட்சம் 10 கொடுக்கலாம். தரமான வீடியோ தேவை என்றால் 25 ஃபிரேம் கூட கொடுக்கலாம். அடுத்ததாக Convert / Save என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் புதிய விண்டோவில் எந்த வகை வீடியோ மற்றும் சேவ் செய்யவேண்டிய லெக்கேஷன் ஆகியவற்றை தேர்வு செய்து Start பட்டனைக் கிளிக் செய்யவும். இனி VLC மீடியா பிளேயர் விண்டோவை மினிமைஸ் செய்து விட்டு பதிவு செய்யவேண்டிய திரைக்காட்சியை கவனிக்கலாம். வேலை முடிந்ததும் விஎல்சி பிளேயரைத் திறந்து அதில் பாஸ் அல்லது ஸ்டாப் பட்டனை அழுத்தி ரெக்கார்டிங்கை நிறுத்தலாம்.

மென்பொருள்கள் இல்லாத நிலையில் எடிட்டிங், குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்தல் போன்ற வசதிகள் தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.

Leave a Reply

You must be logged in to post a comment.