ஈரோடு,
இந்திய மாணவர் சங்கம் மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் மாணவ மாணவியர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி “வாட் நெக்ஸ்ட்” நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது.

இதில், இந்திய மாணவர் சங்க நிர்வாகி என்.மதுமிதா தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் டி.ஜான்சன் கென்னடி வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் கே.இரவிக்குமார், ஈரோடு கலை அறிவியல் துறையின் தலைவர் நா.மணி ஆகியோர் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதில், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசுகையில் :-மாணவர்கள் இங்கே படிப்பதற்காக வரவில்லை, கற்பதற்காக வந்துள்ளனர். இயற்பியல் படித்து விட்டு உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் ஸ்டீபென் ஹாக்கிங். 21 வயதில் அடுத்த இரண்டு வருடங்களில் இறந்து விடுவாய் என மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஆனால், சுமார் 76 வயது வரை வாழ்ந்து இயற்பியல் துறையில் மிகப்பெரிய சாதனைகள் செய்தார். அதற்கு அவரின் உறுதியான நம்பிக்கையே காரணம். மாணவர்கள் எதை படிக்க விரும்புகிறார்களோ அதையே படிக்க வைக்க வேண்டும். இதைத்தான் படிக்க வேண்டும் என வற்புறுத்தக்கூடாது. படிப்பதற்கு பெற்றோர்கள் உதவி செய்ய வேண்டும். அஸ்தஸ்து மற்றும் பணத்திற்காக படிக்க கூடாது. நாம் படித்து இந்த சமுகத்திற்காக உழைக்க வேண்டும்.மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்து விட்டால் சோர்வுற்றுவிடக் கூடாது. எப்போதும் போல் மகிழ்ச்சியாக எதிர்கொள்ள வேண்டும். காரணம் மேலும் அதிகமாக வாய்ப்புகள் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த நிகழ்ச்சி அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் உற்சாகம் ஊட்டும் வகையில் அமைந்திருந்தது. கல்வி பயில்வது, வேலைக்காகவும், மக்கள் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவும் கல்வி கற்க வேண்டும் என்பதையும், குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும் கூட அறிவியல் படிப்பு படிப்பதன் மூலம் சிறந்த விஞ்ஞானியாகவும், சமூக சேவகர்களாகவும் பணியாற்றும் வாய்ப்புள்ளது என மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.  நிறைவாக, மாணவ சங்க நிர்வாகி எம்.சாரதா நன்றி கூறினார். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் ஆர்.ரகுராமன், செயலாளர் எஸ்.சுப்பிரமணி, துணைத்தலைவர் முருகையா, மாதர் சங்க நிர்வாகி ஆர்.கோமதி, வாலிபர் சங்க மாவட்ட அமைப்பாளர் ஏ.சகாதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.