மேட்டுப்பாளையம்,
பலாப்பழங்களை தேடி கல்லார் அரசு பழப்பண்ணையை காட்டு யானைகள் முற்றுகையிட்டு மரங்களை சாய்க்க துவங்கியுள்ளதால் பலா மரங்களில் உள்ள பழங்களை அகற்றும் நடவடிக்கையை பண்ணை நிர்வாகம் துவங்கியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் பகுதியில் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பழமையான பழப்பண்ணை உள்ளது. நீலகிரி மலைக்காட்டின் அடிவாரத்தில் அமைந்துள்ள கல்லார் பகுதியில் ஆண்டு முழுவதும் நிலவும் சீரான சீதோஷண நிலை காரணமாக இப்பழப்பண்ணையில் துரியன் பழம், முட்டைப்பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், சிங்கபூர் பலா உள்ளிட்ட பல அரிய வகை பழங்கள் ஏராளமாக விளைந்து வருகின்றன. தற்போது பலா சீசன் துவங்கியுள்ள நிலையில் இப்பழப்பண்ணையில் உள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட பலா மரங்களில் பலா பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன. இவை பழுக்க துவங்கியுள்ளதால் இதில் இருந்து வரும் நறுமணத்தால் ஈர்க்கப்படும் காட்டு யானைகள் பண்ணையை முற்றுகையிட துவங்கியுள்ளன. இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களில் கூட கம்பி வேலிகளை துண்டித்துவிட்டு பண்ணைக்குள் நுழையும் யானைகள் மரங்களில் உள்ள பலாப்பழங்களை பறித்து உண்ண துவங்கி விடுகின்றன.உயரமாக வளரும் தன்மையுள்ள பலா மரங்களில் பழங்களை தனது துதிக்கையால் பறிக்க இயலாவிட்டால் மரங்களை சாய்த்து விட்டு அதில் உள்ள பழங்களை ருசிக்க துவங்கி விடுகின்றன.

மேலும், பண்ணையை சுற்றியுள்ள வனத்தில் இருந்து வரும் குரங்கு கூட்டங்கள் அங்கேயே முகாமிட்டு பலாப்பழங்களை கடித்து சேதப்படுத்தி வருகின்றன. பலாப்பழங்களை தேடி வரும் யானைகள் மற்றும் குரங்குகளால் பலா மரங்கள் மட்டுமின்றி இங்கு வளர்க்கப்பட்டு வரும் பிற வகை அரிய வகை மரங்களும், செடிகளும், விற்பனைக்காக தயாராகும் மூலிகை மற்றும் மலர் நாற்றுகளும் சேதமடைந்து வருகின்றன. மேலும் இப்பண்ணையை பார்வையிட சுற்றுலா பயணிகளும் வருவதால் வனத்துறையினரின் ஆலோசனைப்படி இங்குள்ள பலா மரங்களில் இருந்து பழங்களை அகற்றும் பணியை பண்ணை நிர்வாகம் தீவிரப்படுத்தியிருக்கிறது. இதற்காக கல்லார் பழப்பண்ணையில் முதல் முறையாக பழுக்கும் நிலையில் உள்ள பலாக்கள் பறித்து விற்பனை செய்துகொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனையடுத்து மரம் ஏறும் ஆட்கள் மூலம் மரங்களில் ஏறி பழங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

– இரா.சரவணபாபு

Leave a Reply

You must be logged in to post a comment.