ஈரோடு,
மூதாதையர்கள் நிலங்களை, ஈரோடு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் செந்தில்குமார் அபகரித்துவிட்டதாக கூறி, அவரது உறவினர்கள் உள்ளிட்ட ஆறு பேர், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் திங்களன்று பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் வெப்படையை சேர்ந்த, மஞ்சுளா(70), அவரது மகன்கள் பிரகாஷ்(38), கார்த்தி(36), மருமகள்கள் செல்வி(30), ருக்குமணி(28), பேரன் விக்னேஷ்(2) ஆகியோர், திங்களன்று காலை, 11:45 மணிக்கு ஈரோடு ஆட்சியர் அலுவலகம் வந்தனர். திடீரென, பிரகாஷ் என்பவர், ஐந்து லிட்டர் மண்ணெண்ணெயை கேனை எடுத்து, தங்கள் ஆறு பேர் மீதும் ஊற்றிக் கொண்டு, கூச்சலிட்டார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து ஆயுதப்படை காவலர்கள் ஓடிவந்து, கேனை பறித்தனர். பின்னர் அனைவர் மீதும் தண்ணீர் ஊற்றினர். அப்போது, இருதய அறுவை சிகிச்சை பெற்ற மஞ்சுளா மயங்கி கீழே விழுந்தார். அவரை தண்ணீர் தெளித்து எழுப்பி அனைவரையும் காவலர்கள் வேனில் ஏற்றி, சூரம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் பற்றி பிரகாஷ் கூறியதாவது:எங்களது மூதாதையர் காலத்தில், ஈரோடு பிரப் ரோடு – கோட்டை இடையே உள்ள பிருந்தா வீதியில், ரூ 70 கோடி முதல் 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து வாங்கப்பட்டது. எங்கள் தந்தை குருசாமியின் தாத்தா காலத்தில், இச்சொத்துக்கள் வாங்கப்பட்டது. வாரிசு அடிப்படையில் எங்களது பங்காளி முறை கொண்ட ஈரோடு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் செந்தில்குமார் அதனை அனுபவிக்கிறார்.எங்களது பங்கை தர மறுக்கிறார். நீதிமன்றம் மூலம் தீர்வு பெற விடாமல் தடுக்கிறார். அதிகாரிகளிடம் மனு வழங்கினாலும் காவல்துறையில் புகார் செய்தாலும்தடுத்துவிடுகிறார். எங்கள் பங்கை, எங்களுக்கு பெற்றுத்தர வேண்டும், என்பதற்காக தீக்குளிக்க வந்தோம் என்றார்.

குறைதீர் கூட்டத்தில், 12:00 மணி வரை பங்கேற்ற ஆட்சியர் பிரபாகர், வெளியே புறப்பட்டு சென்றபோது, அங்கிருந்த காவலர்களிடம் சம்பவம் பற்றி கேட்டறிந்தார். பின், ‘‘ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 42 இடங்களில் கேமராக்கள் உள்ளன. மண்ணெண்ணெயை யார் கொண்டு வந்தார்கள் என்பதை பாருங்கள். அவர் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். அல்லது மண்ணெண்ணெயை ஊற்றியவர் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள்’’ எனக்கூறி சென்றார். இப்பிரச்சனை குறித்து, ஆறு பேரிடமும் சூரம்பட்டி காவலர்கள் விசாரித்து வருகிறார்கள்.

கோட்டை விட்ட காவலர்கள் :
ஒவ்வொரு வாரமும், காவல்துறை அதிகாரி ராஜ்குமார் தலைமையில், ஆயுதப்படை காவலர்கள் உதவியுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பணி செய்வோரைக்கூட சோதனை செய்வார்கள். ஆனால் மண்ணெண்ணெயுடன் செல்வோரை மட்டும் ‘கவனமாக’ கோட்டைவிட்டு, ‘சம்பவம்’ நடந்த பின், போவோர், வருவோரை எல்லாம் மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என அரசு ஊழியர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.