கோவை,
கோவை மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்பட்டு வரும் 72 ப்ளே ஸ்கூல் விரைவில் மூடப்படும் என தொடக்க கல்வி அதிகாரி பாலுமுத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்ந்து, தனியார் பள்ளிகளுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. தமிழகத்தில் பெரும்பாலான ப்ளே ஸ்கூல், நர்சரி, பிரைமரி பள்ளிகள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. சில பள்ளிகள் அங்கீகாரம் பெறாமலேயே செயல்பட்டு வருகிறது. அதிகாரிகள் பெயரளவில் ஒரு கல்வியாண்டில் 3 முறை மட்டும் விளக்க நோட்டீஸ் வழங்கி, செயல்பட அனுமதிக்கின்றனர். பள்ளியை மூடுவதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை.இந்த நிலையில் கடந்த 2016-17ம் கல்வியாண்டில் ப்ளே ஸ்கூல் (விளையாட்டு பள்ளிகள்) செயல்பட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதில் பள்ளி கட்டிடம் காங்கீரிட்டாக இருக்க வேண்டும், சிசிடிவி காமிராக்கள் பொருத்த வேண்டும், விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும், ஆசிரியர்கள் மீது குற்றவழக்குகள் இருக்கக்கூடாது, அதற்கான காவல்துறையின் நற்சான்று, முக்கிய சாலைகளில் பள்ளிகள் இருக்கக்கூடாது, தீ தடுப்பு சான்று, சுகாதாரத்துறை சான்று, வாடகை கட்டிடம் என்றால் 5 ஆண்டுக்கான ஒப்பந்த சான்று உள்ளிட்ட விதிமுறையுடன் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளே ஸ்கூல் நடத்த மாவட்ட தொடக்க கல்வித்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ப்ளே ஸ்கூலில் ஒன்றரை வயது முதல் 5 வயது வரை குழந்தைகள் சேர்க்க வேண்டும். ப்ரிகேஜி, யுகேஜி, எல்கேஜி முறையே வகுப்புகள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடக்க கல்வித்துறை சமீபத்தில் மாவட்டத்தில் உள்ள ப்ளே ஸ்கூல் விவரம், அங்கீகாரம் பெற்றவை, விதிமுறையுடன் செயல்படுகிறதா என்ற விவரத்தை அனுப்புமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.கோவை மாவட்டத்தில் ஏஇஇஓக்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 80 பள்ளிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 8 பள்ளிகள் மட்டும் தொடக்க கல்வி அதிகாரியிடம் அங்கீகாரம் பெற்றுள்ளது தெரியவந்தது. 72 பள்ளிகள் பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தொடக்க கல்வி அதிகாரி பாலுமுத்து கூறுகையில்: ப்ளே ஸ்கூல் அங்கீகாரத்துடன் செயல்பட வேண்டும். மாவட்டத்தில் 72 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை. தகுந்த விதிமுறைகளும் பின்பற்றவில்லை. 72 பள்ளிகளுக்கு 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. பெரும்பாலான பள்ளிகள் பதில் அளிக்கவில்லை. 3வது நோட்டீஸ் வரும் நாட்களுக்கு வழங்கப்பட்டு விடும். பதில் அளிக்காதபட்சத்தில் கல்வி அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்து பாரபட்சமின்றி அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.