ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2007, மே 18-ஆம் தேதி ஹைதராபாத் சார்மினாருக்கு அருகில் இருந்த மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 58 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் 5 பேர் உயிரிழந்தனர்.
குண்டுவெடிப்பு தொடர்பாக, இந்து அமைப்பைச் சேர்ந்த அசீமானந்த், தேவேந்திர குப்தா, லொகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் தேசிய புலனாய்வு முகமை குற்றம்சாட்டியது. இவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சுனில் ஜோஷி என்பவர் விசாரணையில் போதே இறந்து விட்டதால், 5 பேர் மீது மட்டும் விசாரணை நடைப்பெற்று வந்தது. சுமார் 200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சுமார் 11 ஆண்டுகளுக்கு பின், திங்களன்று இந்த வழக்கில் ஹைதராபாத் என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, உரிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் இந்து அமைப்புகளுக்கு தொடர் இருப்பதை சிபிஐ தனது விசாரணையில் கண்டறிந்தது. அதனடிப்படையிலேயே தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா உள்ளிட்டோரை 2010-இல் கைது செய்தது.ஆனால், என்.ஐ.ஏ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் போக்கு திசைமாறியது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அசீமானந்த், தில்லி திஸ் ஹசாரே நீதிமன்ற நீதிபதி முன்பு முன்னவர் அளித்த வாக்குமூலத்தில் ஹைதராபாத் மெக்கா மசூதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த போட்டிருந்த திட்டத்தை ஒப்புகொண்டார். எனினும் பின்னர் தாம் அளித்த வாக்குமூலத்தில் இருந்து பின் வாங்கினார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் நிலைமைகள் அனைத்தும் மாறின. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.