கோவை,
பெண்கள், சிறுமிகள் மீது தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகளை தடுத்து நிறுத்த பாரதபிரதமர் தலையிட வேண்டுமென எல்ஐசி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இன்சூரன்ஸ் கார்ப்ரேசன் ஊழியர் சங்கத்தின் கோவை கோட்டத்தின் சார்பில் மகளிர் துணைக்குழு அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரம் பெற்று எழுபத்தோரு ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்திய நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் ஈவிரக்கமற்ற முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் காஷ்மீர், குஜராத், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்ட செய்தி மனசாட்சியுள்ள அனைவரையும் பதைபதைக்கவைத்திருக்கிறது. இத்தகைய குற்றங்களை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகளே குற்ற செயல்களை புரிவதும், குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருப்பதும், அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்துவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதிகாரம், பதவி, பணபலம், சாதி ஆதிக்க மனோபாவம், இவற்றை பயன்படுத்தி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் பெண்களின் உயிருக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய குற்றங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் உடனடியாக தலையிட்டு குற்ற செயல் புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடவும், அவர்கள் மீது கடுமையான தண்டனையை வழங்கிட சட்டபூர்வமான பணிகள் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

மேலும், இந்த வன்கொடுமைகளுக்கெதிராக சட்டங்களை நாடு முழுவதும் கறாராக அமலாக்க படுவதையும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டுமென கோவை பகுதி இன்சூரன்ஸ் கார்ப்ரேசன் ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைக்குழு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.