புதுதில்லி, ஏப்.15-

இந்துத்துவா வெறியர்களைப் பாதுகாத்திட பாஜக அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவுதான் கத்துவா மற்றும் உன்னாவோ கொடூரச் செயல்களுக்குக் காரணங்களாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.

கத்துவா கொடூரம் மற்றும் உன்னாவோ கொடூரக் குற்றங்கள் குறித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது”

”ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா என்னுமிடத்தில் ஓர் எட்டுவயது சிறுமியை மிகக் கொடூரமானமுறையில் கோவிலுக்குள் அடைத்துவைத்து, மயக்கமருந்து கொடுத்து, மிக மோசமானமுறையில் இந்துத்துவா வெறியர்கள் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கி, கொலை செய்துள்ள செயல் நாட்டையே கடும் ஆவேசத்திற்குள்ளாக்கியுள்ளது.

இதில் மிகவும் அதிர்ச்சியும் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடிய அம்சம் என்னவெனில், இக்கொடூரக் குற்றத்தைப் புரிந்து கைதுசெய்யப்பட்டுள்ள, கயவர்களைப் பாதுகாத்திட, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்களே  முன்வந்திருப்பதாகும். மற்றுமொரு மோசமான நடவடிக்கை என்பது, இதுதொடர்பான வழக்குத் தாள்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திடாமல் தடுத்திட அந்த ஊர் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த சில வழக்குரைஞர்கள் முயற்சித்ததாகும்.

நாடே கொந்தளித்து எழுந்துள்ளநிலையில், அந்த இரு அமைச்சர்களும் ராஜினாமா செய்திருக்கிறார்கள். எனினும்  அது போதுமானதில்லை. நீதித்துறை நடவடிக்களைத் தடுத்திட்டதற்காக அவர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். அதே போன்று, வழக்குரைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகளும் இவ்வாறு நீதித்துறை நடவடிக்கைகளைத் தடுக்க முயன்றதற்கு எதிராக விசாரிக்கப்பட வேண்டும்.

உத்தரப்பிரதேச அரசாங்கமும் இழிவானமுறையில் …

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆதித்யநாத் அரசாங்கமும் உன்னாவோவில் சிறுமியை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆளும் கட்சி எம்எல்ஏ, குல்தீப் செங்கர், என்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்ததன் மூலம் மிகவும் இழிவான முறையில் நடந்து கொண்டுள்ளது. மேலும், அச்சிறுமியின் தந்தை காவல்துறையினரால் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இறந்துள்ள சம்பவம் குறித்தும் நிர்வாகம் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். சிறுமியின் தந்தையை எம்எல்ஏ-யின் சகோதரனும் அவனது அடியாட்களும் கடுமையாக அடித்துக் கொடுங்காயங்களை ஏற்படுத்தி இருந்தனர்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் அரசு நிர்வாகம் குறித்து கடும் விமர்சனங்களைப் பதிவு செய்த பின்னர்தான் எம்எல்ஏ-யைக் கைது செய்ய ஆணைபிறப்பிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த எம்எல்ஏ-யைப் பாதுகாத்திட நடவடிக்கைகளை மேற்கொண்ட இதே ஆதித்யநாத் அரசாங்கம்தான், இதற்கு முன்பு, 2013 செப்டம்பரில் முசாபர்நகரில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற கலகங்களின்போது கொலை, கொள்ளை, மற்றும் பல்வேறு கொடூரமான குற்றங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 131 வழக்குகளை எவ்வித மன உறுத்தலுமின்றி விலக்கிக் கொண்டிருக்கிறது. பாஜக அரசாங்கத்தின் இந்நடவடிக்கை, மதவெறியர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக எவ்விதமான கொலை, கொள்ளை போன்ற கொடூரமானக் குற்றங்களைச் செய்தாலும் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிற சமிக்ஞையை அளித்திருக்கிறது.

மிகக்கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களைப் பாதுகாத்திட இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் நேரடியான விளைவுதான் உன்னாவோ குற்றமாகும்.”

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.