புதுதில்லி, ஏப்.15-

எந்தவிதத்திலும் ஒத்துவராத பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது முடிவுக்கு வந்துவிட்டதாக, ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரின் சகோதரரும் அமைச்சருமான தஸ்தக் முப்தி சொல்லியிருக்கக்கூடிய அதே சமயத்தில், இன்னமும் கூட்டணியைத் தொடர்வதற்கான காரணம் என்ன என்று முதலமைச்சர் மெகபூபா முப்தி விளக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜம்மு-காஷ்மீர் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமி கோரியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைமையில் இயங்கும் பாஜகவுடன் எவ்விதத்திலும் ஒத்துப்போகாததொரு கூட்டணியை வைத்துக்கொண்டதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதிலிருந்து பிடிபியைத் தடுப்பது என்ன என்று தாரிகாமி கேட்டார். பாஜகவுடனான கூட்டணி ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று மாநிலத்திலும், மாநிலத்திற்கு அப்பாலும் இயங்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் எச்சரித்துள்ள நிலையிலும் பிடிபி சொரணையற்றிருந்ததன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஓர் ஆழமான நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

பிடிபி கட்சி தன்னுடைய கூட்டாளியான பாஜக,  கூட்டணி வைத்தபோது கூறிய எந்தவொரு உறுதிமொழியையும் காப்பாற்றிடவில்லை என்பதுமட்டுமல்ல, பாஜக தங்களுடைய இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை கூட்டணிக்கட்சியினரின் எவ்விதமான எதிர்ப்புமின்றி மிகவும் வெறித்தனமான முறையில் செயல்படுத்தியும் வருகிறது என்றும் கூறினார்.

எட்டுவயது சிறுமி அசீஃபா கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட குற்றத்தையும் அவற்றைச் செய்திட்ட கயவர்களையும்  மறைத்திட பாஜகவைச் சேர்ந்த இரு கேபினட் அமைச்சர்களும் மற்றவர்களும் வெளிப்படையாகவே முயற்சித்தார்கள்.

இந்த இரு  அமைச்சர்களுக்கும் எதிராக முதலமைச்சர் பல மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுத்திடவில்லை. இக்கொடுமைக்கு எதிராக நாடு முழுதும் ஆவேசத்துடன் கிளர்ச்சிப் போராட்டங்கள் வெடித்தபின்னர்தான் இந்த இரு  அமைச்சர்களும் அரை மனதுடன் தங்கள் ராஜினாமாக் கடிதங்களைச் சமர்ப்பித்திருக்கிறார்கள்.  அசீபாவிற்கு நீதி கிடைப்பதைத் தடுத்திட்ட கயவர்கள் அனைவருக்கு எதிராகவும் கிரிமினல் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டியது இப்போதைய தேவையாகும் என்றும் தாரிகாமி தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீல் மாநிலத்தில் கூட்டணி அரசு பதவியேற்ற நாளிலிருந்தே, ஒட்டுமொத்த காஷ்மீரும் ராணுவத்தின் கொட்டடியாக மாறிவிட்டது என்றும் ராணுவத்தினரின் அதீத தாக்குதல்கள் நாளும் நடைபெறுவதும் ஆட்சியாளர்கள் அதனைத் தடுத்துநிறுத்திடக்கூடிய விதத்தில் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதும் தெள்ளத்தெளிவாகிவிட்டது என்றும் தாரிகாமி தெரிவித்தார்.  “கூட்டணியின் நிகழ்ச்சிநிரல்” என்பதெல்லாம் கேலிக்கூத்து என்பதை ஒட்டுமொத்த மாநிலமும் புரிந்துகொண்டுவிட்டது என்றும் தாரிகாமி கூறியுள்ளார்.

   (ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.