புதுதில்லி:
நீரவ் மோடி தன்னிடமிருந்த கறுப்புப் பணத்தை சாமர்த்தியாமாக வெள்ளையாக்கிக் கொண்டிருப்பதாகவும், அதற்கு இந்தியாவைச் சேர்ந்த 5 வங்கிகள்தான் அவருக்கு உதவி செய்திருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 13 ஆயிரத்து 800 கோடி அளவிற்கு மோசடி செய்து விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி விட்டார். அவர் ஹாங்காங்கில் தற்போது வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரைக் கைது செய்யவும், கடனை வசூலிக்கவும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், நீரவ் மோடி தன்னிடமிருந்த கறுப்புப் பணத்தை, வெளிநாடுகளில் உள்ள தனது நிறுவனங்கள் மூலம் வெள்ளையாக்கும் நடவடிக்கைக்கு, இந்தியாவைச் சேர்ந்த 5 வங்கிகள் உடந்தையாக இருந்தது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதாவது நீரவ் மோடியின் கறுப்புப் பணத்தை, ‘ரவுண்ட் டிரிப்’ முறையில், .இந்திய வங்கிகள் சில வெள்ளையாக்கிக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.‘ரவுண்ட் டிரிப்’ என்பது இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தை- முதலில் வெளிநாட்டிலுள்ள மொரீஷியஸ் நிறுவனங்களில் முதலீடு செய்து- பின்னர் அந்த மொரீஷியல் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்தது போல காண்பித்து, பணத்தை வெள்ளையாக்குவதாகும்.

இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்படும் பணம் கறுப்புப் பணமாகவோ மோசடிப் பணமாகவோ இருக்கும். ஒரு சுற்று வெளிநாடு சென்று மீண்டுவிட்டால் அப்பணம் நல்ல பணமாக அல்லது வெள்ளைப் பணமாக மாறிவிடும். அதனை வேறு ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டால் மோசடிப் பணத்தை மீட்க முடியாது. கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிக்கவும் முடியாது.இந்த வகையில் இந்தியாவிலுள்ள கறுப்புப் பணமானது, வங்கிகள் மூலமாகவே வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு, முதலீடு செய்யப்படும். ஆகவே, ரவுண்ட் ட்ரிப் முறையில் நீரவ் மோடியின் கறுப்புப் பணம் வங்கிகள் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, சிண்டிகேட் பேங்க், ஆக்சிஸ் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆப் இந்தியா ஆகிய ஐந்து வங்கிகளும் ரவுண்ட் டிரிப் முறையில் பஞ்சாப் நேசனல் வங்கியால் வழங்கப்பட்ட ரூ. 6 ஆயிரம் கோடி கடனை அனுபவிக்க நீரவ் மோடிக்கு உதவியதாக அமலாக்கத் துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மேலும், பெல்ஜியத்தில் 10, நெதர்லாந்தில் 8, அமெரிக்காவில் 3, ஐக்கிய அரபு அமீரகத்தில் 13 என நீரவ் மோடி சம்பந்தப்பட்ட மொத்தம் 47 நிறுவனங்கள் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளன. பஞ்சாப் நேசனல் வங்கியிடம் பெற்ற புரிந்துணர்வுக் கடிதத்தின் வாயிலாக மேற்கூறிய நிறுவனங்களுக்குப் பணத்தை மாற்ற நீரவ் மோடி முயற்சித்ததும் தெரியவந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: