===சீத்தாராம் யெச்சூரி====                இந்திய மக்கள் இன்றைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவு பல்வேறு சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். ஆர்எஸ்எஸ்/பாஜக தலைமையிலான மத்திய அரசின் நாசகர கொள்கை திசை வழியை மாற்றியமைக்க வேண்டுமானால் மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் உக்கிரமான மக்கள் போராட்டங்களை நடத்துவது ஒன்றே நம்முன் உள்ள வழியாகும். இத்தகைய மக்கள் போராட்டங்களை மேலும் எழுச்சியாக முன்னெடுத்துச்செல்ல வழிகாட்டக்கூடியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு அமையும். இது கட்சியின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பது திண்ணம். இந்திய மக்களும், மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசும் சந்திக்கக் கூடிய பலமுனை சவால்களை முறியடிப்பதற்கும், இந்த கடமையை நிறைவேற்றுவதற்கான அரசியல் நிலைபாட்டை உறுதி செய்வதாகவும் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு அமையும்.

உட்கட்சி ஜனநாயகம்
நமது தனித்துவமிக்க நடைமுறையின்படி, கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படவிருக்கிற அரசியல் நகல் தீர்மானத்தை மத்தியக்குழு நிறைவேற்றி கட்சி அணிகள் அனைத்தும் விவாதிக்கக்கூடிய வகையில் வெளியிட்டுள்ளது. அகில இந்திய மாநாடு நடைபெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு அரசியல் நகல் தீர்மானம் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இதன் மீது திருத்தங்களையும் கருத்துக்களையும் தெரிவிப்பதற்கு உரிமை படைத்தவர்கள் ஆவார்கள். அகில இந்திய மாநாட்டிற்கு முன்பாக கட்சி அணிகள் அனைத்தும் இதுகுறித்து விவாதித்து திருத்தங்களை அனுப்பியுள்ளனர். அகில இந்திய மாநாட்டில் கட்சி மையத்திற்கு வந்த திருத்தங்கள் அனைத்தும் முன்வைக்கப்படும். கட்சியின் எதிர்கால திசைவழியை தீர்மானிக்கும் அறிக்கையை இறுதிசெய்யும் பணியில் கட்சி அணிகள் அனைவரும் முழுமையாக பங்கேற்பது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உட்கட்சி நடைமுறையாகும்.

முன்னெப்போதும் சந்தித்திராத சவால்கள்
பல்வேறு சவால்களை நாம் சந்தித்துக் கொண்டிருந்தபோதும் அவற்றுள் நான்கை உடனடியாக எதிர்கொண்டு முறியடித்தாக வேண்டும். நவீன தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை அதிதீவிரமாக பின்பற்றப்படுவதால் மக்கள் மீதான பொருளாதார சுரண்டல் மிக மோசமான அளவில் அதிகரித்துள்ளது. 2017ல் இந்திய மக்கள் தொகையில் ஒரே ஒரு சதவீதமாக இருக்கக்கூடிய இந்திய பணக்காரர்கள் 73 சதவீதம் அளவிற்கு தங்களது சொத்துக்களை வாரிக் குவித்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்த விகிதம் 49 சதவீதமாக இருந்தது.

பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்துள்ளதானது பொருளாதார சுரண்டல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதன் வெளிப்பாடாகும். இந்திய பொருளாதாரத்தின் ஒரு துறையைக்கூட விட்டுவிடாமல் அனைத்து துறைகளையும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு பாஜக அரசு திறந்துவிட்டுள்ளது. இதன்மூலம் அந்நிய மூலதனம் அதிகபட்ச லாபத்தை அள்ளிச் செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அந்நிய மூலதனத்திற்கு புதிய புதிய மேய்ச்சல் நிலம் தேவைப்படுகிறது. தனியார்மயமாக்கப்படாத பொதுத்துறை ஒன்றுகூட இல்லை.

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 60 சதவீதம் அளவிற்கு பங்களிப்பு செய்யக்கூடிய, விவசாயம் அல்லாத துறையில் நான்கில் மூன்று பங்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய முறைசாரா தொழில்துறையின் மீது பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி என்ற இரட்டை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதால் அந்த துறை நிலைகுலைந்துள்ளது. மத்திய அரசினால் பின்பற்றப்படும் பொருளாதார கொள்கையின் ஒட்டுமொத்த விளைவு என்னவெனில் விவசாயத்துறை நெருக்கடி மேலும் ஆழமாகி இருப்பதாகும்? இதன் காரணமாக விவசாயிகளின் தற்கொலை அதிகரித்த வண்ணம் உள்ளது.

உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு கூடுதலாக விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்ற வாக்குறுதிக்கு பாஜக அரசு துரோகம் இழைத்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் என இளைஞர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியும் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் எதிர்மறையாக முறைசார் தொழில் துறையிலும் வேலையின்மை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முறைசாரா பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் பெரும்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதால் இளைஞர்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்துள்ளது.

இந்திய பொருளாதார நெருக்கடி ஆழமாகியுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார வளத்தை கொள்ளையடிப்பது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேசெல்கிறது. வங்கிகளிலிருந்து தொழில் அதிபர்கள் பெற்ற சுமார் 11.5 லட்சம் கோடி கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லை. நாட்டின் வளத்தை கொள்ளையடிப்பவர்கள் எவ்வித தடையுமில்லாமல் நாட்டை விட்டு தப்பிச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பெரு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட ரூ.3 லட்சம் கோடி அளவிலான கடனை தள்ளுபடி செய்த மத்திய அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

மூண்டெழும் போராட்டங்கள்
கடந்த மூன்றாண்டுகளில் மிகப் பெரிய அளவில் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் நடந்து வருகிறது. 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இரண்டு அகில இந்திய வேலைநிறுத்தங்கள், 2017ஆம் ஆண்டு தில்லியில் மாபெரும் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்தியாவில் உழைக்கும் வர்க்கம் நடத்திய நீண்டநெடிய போராட்டத்தின் காரணமாக அனுபவித்து வரும் பலன்கள் பறிக்கப்படுகின்றன. தற்போது நடப்பில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றன. தொழிலாளர் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகள் கொழுத்த லாபம் சம்பாதிப்பதற்காகவே மக்களின் வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுகிறது என்பது தெளிவு. மாற்றுக் கொள்கை வழித்தடத்தில் மக்கள் போராட்டங்களை வலுவாக நடத்துவதன் மூலமே இதைத் தடுத்து நிறுத்த முடியும்.

நாட்டின் செல்வம் மற்றும் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி பொது முதலீட்டை அதிகப்படுத்துவதன் மூலமே தேவையான உள்கட்டுமானத்தை உருவாக்க முடியும். இதன் மூலம் பெருமளவு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வழங்க முடியும். வேலை வாய்ப்பு பெறுபவர்கள் பெறும் ஊதியத்தை செலவிடும் போது தொழில்துறை உற்பத்திக்கான தேவை அதிகரிக்கும். இதன்மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையும். இதன்மூலம் மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய உள்ளார்ந்த, விரிவடைந்த வளர்ச்சியை எட்ட முடியும்.

இத்தகைய மாற்று கொள்கை திசை வழியின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டி பெரும் திரள் போராட்டங்களை நடத்திட வேண்டும்.விவசாயிகள் மத்தியில் வளர்ந்து வரும் போராட்டத்தின் வெளிப்பாடாக மும்பை நோக்கி நடைபெற்ற விவசாயிகளின் நெடும் பயணம் அமைந்தது. இத்தகைய போராட்டங்கள் மூலமே வஞ்சிக்கப்படும் விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும். இத்தகைய போராட்டங்கள் வருங்காலத்தில் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

போராட்டக்களத்தில் உருவாகும் இடது மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை மூலமே இத்தகைய கொள்கை மாற்றை முன்னிறுத்த முடியும். கடந்த மூன்றாண்டுகளில் சமூக ஒடுக்குமுறைக்கெதிராக நடைபெற்ற பெருமளவிலான போராட்டங்களின் மூலம் தலித் அமைப்புகளுக்கும், இடதுசாரி சக்திகளுக்கும் இடையிலான ஒற்றுமை வலிமை பெற்றுள்ளது. வெகுஜன அமைப்புகள் மற்றும் மக்கள் இயக்கங்கள் சார்பாக அமைக்கப்பட்டுள்ள மக்கள் ஒற்றுமை மேடை, மக்கள் அதிகார கூட்டமைப்பு ஆகிய மேடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மேலும் வலுப்பட வேண்டும். இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பதற்கான வியூகத்தை கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாடு நிச்சயம் வகுத்திடும்.

கூர்மைப்படுத்தப்படும்  வகுப்புவாத அணிதிரட்டல்
மக்கள் முன்னுள்ள மற்றொரு சவால் மத்திய அரசு மற்றும் பாசிச, ஆர்எஸ்எஸ் பரிவாரங்களால் தூண்டிவிடப்படும் வகுப்புவாத அணிதிரட்டல் ஆகும். பசு பாதுகாப்பு என்கிற பெயரில் தலித்துகளும், இஸ்லாமியர்களும் குறிவைத்து படுகொலை செய்யப்படுகின்றனர். கலாச்சார காவலர்கள் என்ற போர்வையில் நம்முடைய இளைஞர்கள் என்ன உடை உடுத்த வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும், யாரோடு பழக வேண்டும் என்பதையெல்லாம் திணிக்க முயல்கிறார்கள். உன்னாவ் மற்றும் காதவ்வில் பச்சிளம் சிறுமிகள் மனிதத்தன்மையற்ற முறையில் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது மனித சமூக நாகரிகத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

பாலியல் பலாத்காரமும் கூட வகுப்புவாதத்தை தூண்டிவிட்டு, சமூக ஒற்றுமையை சிதைக்கும் அரசியல் ஆயுதமாக மதவெறியர்களால் பயன்படுத்தப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் குறிப்பாக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்திய வரலாற்றை இந்துக்களின் புராணமாகவும் இந்திய தத்துவ இயலை இந்து ஆன்மீக இயலாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகைய முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி மாணவர் பேரவை தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பினால் குறி வைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஏபிவிபி மண்ணை கவ்வியுள்ளது. ஒன்றுபட்ட, வலிமையான அணிதிரட்டல் மூலம் மதவெறி சக்திகளின் நடவடிக்கைகளை முறியடித்து பின்னுக்குத் தள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

எதேச்சதிகார தாக்குதல்கள்
அரசியல் சாசன அமைப்புகளின் மீது கொடூரமான தாக்குதல் தொடுக்கப்படுவதும் நடந்து வருகிறது. இந்திய நீதித்துறையின் உயர் அமைப்பான உச்சநீதிமன்றத்தில் தலையீடு செய்து நீதி வழங்கும் முறையையே தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சிகள் சமீபத்தில் அம்பலமாகின. தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பினால் இயக்கப்படும் தனியார் குண்டர் படைகளின் மிரட்டலுக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அடிபணியும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘பத்மாவத்’ திரைப்படத்திற்கு தரப்பட்ட நெருக்கடி இதை உணர்த்தும். மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை சுதந்திரத்தின் மீது பல்வேறு முனைகளிலிருந்து தாக்குதல் தொடுக்கப்படுகிறது. சக்திவாய்ந்த மக்கள் போராட்டத்தின் மூலம் இதை முறியடித்தாக வேண்டும்.

அடுத்ததாக மத்தியில் உள்ள பாஜக கூட்டணி அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தத்திற்கு இணங்கியும் பல்வேறு சர்வதேச பிரச்சனைகளில் அமெரிக்காவின் இளைய கூட்டாளியாக மாறி எடுக்கும் நிலைபாடுகளும் இந்தியாவில் இறையாண்மைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. இதன் விளைவாக இந்திய அயல்துறை கொள்கையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க – இஸ்ரேல் – இந்திய கூட்டின் வழியாகவே உலக விவகாரங்கள் அணுகப்படுகின்றன.

கட்சியை வலிமைப்படுத்துவோம்
வளர்ந்து வரும் மக்கள் போராட்டங்களை எவ்வாறு மேலும் ஒருங்கிணைத்து வலிமையாக முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து கட்சியின் 22 ஆவது மாநாட்டில் விவாதிக்கப்படும். கட்சியின் சுயேட்சையான வலிமையை பெருமளவு வளர்ப்பதன் மூலமே நோக்கங்களை நிறைவேற்ற முடியும். கட்சியின் அரசியல்ரீதியாக தலையிடும் ஆற்றல் மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில்தான் தற்போதைய தாக்குதல்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும். கட்சியின் சுயேட்சையான வலிமையை உறுதி செய்வது அதன்மூலம் இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவது போன்றவற்றை செய்வதன் மூலம் போராட்டக்களத்தில் இடது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியும்.

கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டிற்கு பிறகு நடைபெற்ற கட்சி சிறப்பு மாநாடு (பிளீனம்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ‘மக்களிடம் செல்வோம்’ என்ற முழக்கத்தின் அடிப்படையில் நம் கட்சியை புரட்சிகர கட்சியாக கட்டமைக்க வேண்டும் என முடிவெடுத்தது. இந்த இலக்கை அடைய பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இலக்குகளை நோக்கிய பயணம் எந்தளவுக்கு உள்ளது என்பதை ஆய்வு செய்வது 22ஆவது மாநாட்டின் முக்கியப் பணிகளில் ஒன்றாக இருக்கும்.

தற்போது உள்ள சூழலில் இந்திய ஆளும் வர்க்கமும், அதன் தற்போதைய பிரதிநிதியான பாஜக அரசாங்கமும் இந்திய மக்களுக்கு விடுத்துள்ள சவால்களை சக்தியோடு சந்திக்க வேண்டுமானால் கட்சியை வலிமைமிக்கதாக உருவாக்குவது மிக அவசியமாகும். மாற்றுக் கொள்கை வழித்தடத்தின் அடிப்படையில் நடைபெறுவதோடு ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை ஆர்எஸ்எஸ் விரும்புகிற பாசிச இந்து ராஷ்டிரமாக மாற்ற எடுக்கப்படும் முயற்சிகளை உறுதியாக முறியடித்திட வேண்டும்.தற்போது எழுந்துள்ள சவால்களை உறுதியோடு சந்தித்து முறியடிப்பதற்காக வியூகங்களை 22வது அகில இந்திய மாநாடு வகுக்கும். இந்திய ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலை முறியடித்து எல்லோருக்குமான சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க இந்த மாநாடு திட்டமிடும். ஆளும் வர்க்கத்தின் ஆட்சியை முறியடித்து மக்கள் ஜனநாயக இந்தியாவை உருவாக்குவதற்கான பயணத்திற்கு ஒளியூட்டுவதாக இந்த மாநாடு அமையும்.

தமிழில் : மதுக்கூர் இராமலிங்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.