திருவனந்தபுரம்:
காஷ்மீரில் 8 வயது குழந்தை ஆசிபா, பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஈரமான இதயம் படைத்த ஒவ்வொருவரும் ‘ஆசிபா என்னுடைய மகள்’ என்று கூறி, அந்த குழந்தையை காப்பாற்ற முடியாத சமூகத்தில் வாழ்கிறோமே என்று ஆற்றாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கேரளாவின் ‘மாத்ரூபூமி’ நாளேட்டில் உதவியாசிரியராகப் பணியாற்றும் ரஞ்சித் ராம் என்பவர் தனது 2 மாத மகளுக்கு ஆசிபா ராஜ் என்று பெயர் சூட்டியுள்ளார். “என்னுடைய 2-வது மகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று இணையதளத்தில் தேடிக்கொண்டிருந்தேன்; அப்போது, காஷ்மீரில் 8 வயதுச் சிறுமி ஆசிபா, காட்டுமிராண்டித்தனமான முறையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன்; என்னுடைய முதல் குழந்தைக்கு 7 வயதாகிறது; அந்த குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது என ஒரு நிமிடம் சிந்தித்தேன்; 2 பெண் குழந்தைகள் வைத்திருக்கும் என்னை இந்த சம்பவம் நிம்மதி இழக்கச் செய்தது; இதனால், கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி பிறந்த எனது 2-ஆவது குழந்தைக்கு ஆசிபாவின் நினைவாக, ஆசிபா ராஜ் என்று பெயர் வைக்க முடிவு செய்தேன்” என்று ரஞ்சித் ராம் கூறியுள்ளார்.

மேலும், “மதத்தையும், சாதியையும் நான் இந்தப் பெயரில் பார்க்கவில்லை, மனிதநேயத்தை மட்டுமே பார்த்து இந்தப் பெயரை என் குழந்தைக்கு சூட்டினேன்; என் மனைவி சந்தியாவிடம் இதுகுறித்து தெரிவித்தேன்; அவரும் சம்மதித்தார். அதன்பின், என் விருப்பத்தை முகநூலில் பதிவிட்டேன்” என்றும் ரஞ்சித் ராம் தெரிவித்துள்ளார்.ஆசிபாவின் பெயரை தனது குழந்தைக்கு வைத்திருக்கிறேன் என்று ரஞ்சித் ராம் முகநூலில் பதிவிட்ட பின், அந்தக் கருத்துக்கு ஆதரவாக 26 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்; 15 ஆயிரம் பேர் அதைப் பகிர்ந்துள்ளனர். ரஞ்சித் ராமை, சமூக வலைத்தளவாசிகள் வெகுவாக பாராட்டியும் வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: