திண்டுக்கல், ஏப்.15
பல கோடிக்கும் மேலான எண்களையும், எழுத்துக்களையும் உள்ளடக்கிய புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே தர்மத்துப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழனின் அறிவுக்கூர்மைக்கு மற்றுமொரு சான்று கிடைத்துள்ளது. கடந்த மாதம் பழனி திருஆவினன்குடியில் உள்ள கோவிலில் உள்ள கல் தூணில் சுடேகு முறையிலான எழுத்து மற்றும் எண் கணித கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இதே போல் தற்போது தருமத்துப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே தருமத்துப்பட்டியில் கி.பி.18ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கையை எடுக்காமலும், வரைந்த கோட்டின் மீதே வரையாமலும். வுpளையாடப்படும் தற்கால புதிர் விளையாட்டைப் போன்ற ஒரு வடிவம் பல பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.இந்த புதிர் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயண மூர்த்தி மற்றும் ஜெரால்டுமில்லர் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இந்த புதிர் கல்வெட்டு ஒரு தெருவோரம் உள்ள ஒரு வீட்டில் துணி துவைக்க பயன்படும் ஒரு பலகைக்கல்லாக பயன்பாட்டில் உள்ளது. மொத்தம் 4 கட்டங்களும் ஒரு முழுமை பெறாத கட்டமுமாக சேர்த்து இக்கட்டம் அமைந்துள்ளது. கல்வெட்டின் மேல்பகுதியில் ஒரு சிறிய வட்டமும், இரண்டு ட வடிவ கோடுகளும், வரையப்பட்டு உள்ளன. இந்த கட்டத்திற்குள் கி.பி. 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துக்களை முழுமையாக உருவாக்க முடிகிறது. 12 உயிர் எழுத்துக்களையும். 18 மெய் எழுத்துக்களையும், 216 உயிர் மெய் எழுத்துக்களையும் ஒரு ஆயுத எழுத்தையும் சேர்த்து மொத்தம் உள்ள 247 எழுத்து வடிவங்களை இந்த புதிர் கல்வெட்டில் உருவாக்க முடிகிறது. அத்துடன் ஒரு சிறப்பாக தமிழ் எண்களையும் பல கோடிகளுக்கும் மேலாக முடிவில்லா தமிழ் எழுத்துக்களையும் இந்த புதிர் கல்வெட்டின் மூலம் உருவாக்க முடிகிறது. இவ்வாறு எழுத்துக்களையும் எண்களையும் உருவாக்கும் போது சிரமம் உருவாகும் பட்சத்தில் கல்வெட்டின் மேல் பகுதியில் உள்ள 3 குறியீடுகளை பயன்படுத்தினால் எழுத்துக்களையும், எண்களையும் சுலபமாக உருவாக்க முடிகிறது. புராண காலத்தில் அகத்தியர் காவிரியை தன் கமண்டலத்தில் அடக்கியதை கேள்விபட்டிருக்கிறோம். அதற்கு இணையாக கி.பி. 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களையும் தமிழ் எண்களையும் ஒரு மிகச்சிறிய கட்டத்திற்குள் அடக்கி வடித்த அந்த முகம் தெரியாத நம் தமிழ் முன்னோர்களின் அறிவுக்கூர்மையை நினைத்து பெருமைகொள்ளாமல் இருக்க முடியாது. புதிரான இந்த புதிர் கல்வெட்டை அரசு அருங்காட்சியகத்தில் சேர்க்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

(இலமு, திண்டுக்கல்)

Leave a Reply

You must be logged in to post a comment.