சென்னை:
காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஏப்ரல் 23ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு பயணத்தை திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் திருச்சி முக்கொம்பில் இருந்து மு.க.ஸ்டாலின், இரா.முத்தரசன் தலைமையிலும், அரியலூரில் இருந்து கே.பாலகிருஷ்ணன், ஆ.ராசா, தொல். திருமாவளவன் தலைமையிலும் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற “காவிரி உரிமை மீட்பு பயணம்” வியாழனன்று (ஏப். 12) கடலூரில் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது. சென்னையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டப்பட்டது.

இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தோழமைக் கட்சி தலைவர்களுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்களன்று (ஏப். 16) நடைபெற்றது. இதில் துரைமுருகன் (திமுக), ஜி.ராமகிருஷ்ணன், ஏ.பாக்கியம் (சிபிஐ(எம்), கே.ராமசாமி, .எம்.ஆரூண் (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), இரா.முத்தரசன், வீரபாண்டியன் (சிபிஐ), தொல்.திருமாவளவன், து.ரவிக்குமார் (விசிக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), காதர்மொய்தின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தீக்குளித்து உயிரிழந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மைத்துனர் மகன் சரவணன் சுரேஷ் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகம் வந்த பிரதமரைக் கண்டித்து தீக்குளித்து உயிரிழந்த ஈரோடு தர்மலிங்கம் ஆகியோருக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்தும் மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் அனைத்துக் கட்சிகள் சார்பில் வரும் 23ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சி தலைவர்களை, விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பிரதமரிடம் அழுத்தம் கொடுப்பது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநிலத்தில் உள்ள அதிமுக அரசால் பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு இதுவரை அனுமதி பெற முடியவில்லை. பிரதமரிடம் நேரம் கேட்டு எந்த கடிதமும் பிரதமர் அலுவலகத்திற்கு வரவில்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்ச பொன்.ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக பேட்டியில் தெரிவித்துள்ளார். அதை இதுவரை தமிழக முதலமைச்சர் மறுக்கவில்லை.

எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தீவிர அழுத்தம் கொடுக்கவும், தமிழகத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் படும் இன்னல்களை நேரில் எடுத்துரைக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பது என்று முடிவெடுத்துள்ளோம். இதற்காக பிரதமரை சந்திக்க நேரம் கேட்போம். அவர் நேரம் ஒதுக்கித் தந்தால் 9 கட்சித் தலைவர்களும் பிரதமரை சந்தித்து உரிய அழுத்தம் கொடுப்போம். காவிரி மேலாண்மை வாரியும் அமையும் வரை போராட்டம் தொடரும்.

காவிரி உரிமை மீட்பு பயணம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு தங்களது முழு பங்களிப்பை வழங்கியதைப் போல், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், மகளிர், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும், இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: