திருப்பூர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் திங்களன்று நடைபெற்றது . இதில் பொதுமக்கள் அளித்த மனுக்களில் தெரிவித்ததாவது:

அவிநாசி வட்டம் மங்கரசுவலையபாளையம், பேரநாய்க்கன்புதூர், செல்வபுரம், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வரும் மண்குவாரியால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில், கனரக வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதால், கிராமப்புற சாலைகள் குண்டும் குழியுமாக பழுதடைந்துவிட்டது. சிறுபாலங்களும் பழுதடைந்து விட்டது. தார் ரோடு முழுமையாக சேதமடைந்து மண் சாலையாக மாறிவிட்டது. இதனால் வாகனங்களில் செல்லும்போது புழுதிப்படலத்தால் முன் செல்லும் வாகனங்கள் மற்றும் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. இப்பகுதியில் இரவு நேரங்களில் வெடி வைப்பதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அஞ்சுகின்றனர். விதிமுறைகளை மீறி குவாரி செயல்படுவதால், அருகில் உள்ள விளைநிலங்களில் சிறு சிறு கற்களாலும் அதிக புழுதி படர்வதாலும் விளைச்சல் பாதிப்பும், கால்நடைகளின் மேய்ச்சல் பாதிப்பும் ஏற்படுகின்றது. கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால், குவாரி உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனு: பல்லடம் உழவர் சந்தையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். தினமும் சுமார், 200 விவசாயிகள் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். பல்லடம் உழவர் சந்தை செயல்படும் நேரமான காலை 4.30 மணி முதல் 8 மணி வரை வெளியே கடையை அமைத்து விற்பனை செய்வதால், விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் வெளியில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

அதேபோல், திருப்பூர் குண்டடம் வட்டம், நந்தவனம்பாளையம் கிராமம் கம்பலப்பட்டி பகுதியில் காற்றாலை அமைப்பதற்காக நீர்நிலை மற்றும் ஓடைபகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து மின் கம்பங்கள் ஏற்படுத்தி விவசாயிகளுக்கு இடையூர் ஏற்படுத்தியுள்ளனர். எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றனர். யுவராஜ் அன்பு அவென்யு குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் அளித்த மனு: அவிநாசியில் செயல்பட்டு வரும் வையம் பிராப்பர்டீசிக்கு சொந்தமான அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சி பகுதியில் யுவராஜ் அன்பு அவென்யு அமைந்துள்ளது. இவர்கள், எங்கள் பகுதியில் கழிவுநீர்க்கால்வாய் செல்வதற்கு உரிய ஏற்பாடு செய்யவில்லை, குடிநீர் ஆழ்குழாய்கள் மூன்று உள்ளது. அதில் ஒன்றில் மட்டும் தண்ணீர் வருகிறது, மற்ற குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. எனவே, இத்தகைய வையம் பிராப்பர்டீசி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

குமரானந்தபுரம், நேதாஜி நகர் பொதுமக்கள் சார்பில் அளித்த மனு: திருப்பூர், பள்ளி
பாளையம், பாளையக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நாங்கள் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர்கள். எங்களுக்கு, சொந்த வீடோ அல்லது நிலமோ கிடையாது. மிகவும் வறுமையில் இருக்கிறோம். எனவே, எங்கள் பகுதி மக்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மூலம் நெறிபெருச்சல் பகுதியில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றனர். உடுமலை, செல்லப்பம்பாளையம் ஊராட்சி சின்னப்புதூர் பகுதி பொதுமக்கள் அளித்த மனு: செல்லப்பம்பாளையம் ஊராட்சியில் செயலாளராக பணிபுரியும் ராஜேந்திரன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 30 பெண்கள் சின்னப்புதூர் கிராமத்தில் பணியாற்றி வந்தோம். தற்போது 100 நாட்கள் முடிந்து மீண்டும் பணியை தொடர வேண்டும் என ராஜேந்திரனை கேட்டத்தற்கு, நீங்கள் ஒவ்வொருவரும் ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்தால் பணியை தொடர முடியும் இல்லை என்றால் முடியாது என கூறி வருகிறார். இதனால், வேலை இல்லாமல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, இவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.