கோவை,
ஆசிபா கொலைக்கு நீதி கேட்டு கோவையில் வழக்கறிஞர்கள் திங்களன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீர் மாநிலத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை கண்டித்து, ஆசிபா கொலை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மு.ஆனந்தன் தலைமை தாங்கினார். இதில், சிறுமி ஆசிபா மற்றும் சிறுமி உன்னாவ்ஆகியோருக்கு உரிய நீதி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். ஆசிபா கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி சட்டத்தினை பாதுகாக்க வலியுறுத்தியும், சட்டக்கல்லூரி மாணவி பிரியா மீதான இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரியும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுந்தரமூர்த்தி, வெண்மணி, பாலமுருகன், ஜோதி, நிக்கோலஸ், கோபால்சங்கர், ராமர் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.