புதுதில்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்வா மாவட்டத்தில் 8 வயதுச் சிறுமி ஆசிபா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயதுச் சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், ஆசிபா பாலியல் வன்கொலை தொடர்பான தடயங்களை மறைக்கவும், அழிக்கவும் முயற்சிகள் நடந்த நிலையில், குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற தகவல்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கதுவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கட்கிழமையன்று விசாரணை தொடங்கியது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும், சண்டிகருக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று சிறுமியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு திங்களன்று பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட்டது.மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாதிட்டார்.மேலும், இவ்வழக்கில் “மாநில போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்; போலீசாரின் நடவடிக்கையில் நாங்கள் திருப்தி அடைந்துள்ளோம்” என்ற அவர், “சிபிஐவிசாரணை கோரும் மனுக்களை ஏற்க கூடாது” என்றும் அதேநேரம் “வழக்கு விசாரணையை கத்துவாவில் நடத்துவது சரியாக இருக்காது” என்றும் தெரிவித்தார்.
இதனை அடுத்து, வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறும், சிறுமியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும் ஜம்மு – காஷ்மீர் மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 27-ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: