புதுவாழ்வு திட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் உள்ள ஏழை எளிய மக்களின் வறுமையை குறைக்கும் வகையில் புதுவாழ்வு திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்பட்டு வந்தது. இத்திட்டத்தில் 1500 திட்ட பணியாளர்கள் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி செய்து தொழில் தொடங்க உதவி செய்வது உள்ளிட்ட மாநில அரசின் பல்வேறு திட்டப் பணிகளில் புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இப்படி பணியாற்றி வந்த புதுவாழ்வு திட்ட பணியாளர்களை 2017-ம் ஆண்டு ஜூன் முதல்  வேலை நீக்கம் செய்துவிட்டு அதற்கு மாற்றாக புதிதாக திட்ட பணியாளர்களை ஏஜென்ஸி மூலம் தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 12 ஆண்டுகள் பணியாற்றிய திட்ட பணியாளர்கள் அனைவரும் மூன்று கட்டமாக தேர்வு செய்யப்பட்டு மேற்கண்ட பணியில் நியமிக்கப்பட்டவர்கள்தான்.  இருப்பினும் தமிழக அரசு இவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிதாக பணி தேர்வு செய்வது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
இந்நிலையில், புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் தாங்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும், வெளியிலிருந்து திட்ட பணியாளர்களை தேர்ந்தெடுக்கக் கூடாது என்றும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  வழக்கினை விசாரித்த நீதிமன்றம், 2006லிருந்து பணியாற்றிய அணி தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் யாரும் பாதிக்காத அளவிற்கு அவர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு மேலும் காலம் தாழ்த்தாமல் உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த திட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதுடன் வேலை இல்லாத காலத்திற்கான ஊதியத்தையும் உடனடியாக வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Leave A Reply

%d bloggers like this: