ராஞ்சி:
நீதிபதிகள நியமனம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசு அலட்சியப்படுத்தி இருப்பதற்கு, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு, இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ள கே.எம். ஜோசப், “உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் குறித்து நீதிபதிகள் தேர்வுக்குழு பரிந்துரைகள் அளித்து மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இந்த பரிந்துரைகள் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து இன்னும் அறியாமல் இருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், “மத்திய அரசின் மந்த நிலையைச் சீர்செய்ய உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்” என்றும், “பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதானது, மத்திய அரசு தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவே அர்த்தமாகும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
“தனது அலட்சிப்படுத்துதல் மூலம், மத்திய அரசுக்குச் சாதகமாக இருக்க வேண்டும்;

இல்லாவிட்டால் சிரமப்பட வேண்டியிருக்கும் என நீதித் துறையை ஆட்சியாளர்கள் அச்சுறுத்துகிறார்களா?” என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ள அவர், “நீதித் துறையின் சுதந்திரமே அபாயத்தில் உள்ளது; தேர்வுக் குழு அளித்த இரு பரிந்துரைகளை நிறைவேற்றவில்லை எனில், உச்ச நீதிமன்றத்துக்கு வாழ்வா, சாவா போராட்டமாகி விடும்; வரலாறும் நம்மை மன்னிக்காது” என்றும் கூறியுள்ளார்.

மூத்த வழக்கறிஞர் இந்திரா மல்ஹோத்ராவையும், ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்பையும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் பரிந்துரை அளித்திருந்தது. அந்த பரிந்துரைகளை ஏற்காமல் கடந்த 3 மாதமாக மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. இதில், அரசியல் பின்னணியும் உள்ளது.

அதாவது, மோடி அரசானது, கடந்த ஆண்டு, ஜார்கண்ட் மாநில அரசைக் கவிழ்த்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது. அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டபோது, குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து நீதிபதி கே.எம்.ஜோசப் தீர்ப்பளித்தார். இதனாலேயே ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மோடி அரசு அஞ்சுவதாக கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: