திரிபுராவில் தேர்தல் நடைபெற்று பாஜக-ஐபிஎப்டி கூட்டணி அரசாங்கம் அமைந்து ஐந்து வாரங்களாகி இருக்கிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மார்ச் 3இன் பிற்பகலிலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சி அலுவலகங்கள், அவர்களுடைய இல்லங்கள் மற்றும் தொழிற்சங்க அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள்  தொடங்கிவிட்டன. அதிலிருந்து பாஜக/ஆர்எஸ்எஸ் குண்டர்களின் வன்முறை வெறியாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில இடங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்களிடமிருந்து பணம் பறித்திடும் வேலைகளும் நடந்துள்ளன. சில இடங்களில் அவர்களின் வாழ்வாதாரங்களாக இருந்த கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டுவிட்டன. அவர்களின் ரப்பர் தோட்டங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.  உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பிரதிநிதிகள் ராஜினாமா செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறார்கள், அல்லது, பாஜக அல்லது ஐபிஎப்டி-யில் சேர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

தாக்குதல்களைத் தொடர்ந்து, கட்சி அலுவலகங்கள் மீது காவல்துறையினரின் சோதனைகள் தொடர்ந்தன. ஏதேனும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கிறதா என்று தேடினர். இவ்வாறு ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கமானது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் குறிவைத்துத் தாக்குவதற்கு, காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், வெகுஜன அமைப்புகளையும் பலவீனப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடனேயே இவ்வாறு வன்முறை வெறியாட்டங்களும், ஊழியர்கள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கட்சியையும், இடது முன்னணியையும் நசுக்குவதற்காக, கட்சியின் தேர்தல்  தோல்வியை அவர்கள் வலுவந்தமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில், 2011 சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி தோல்வியடைந்த பின்னர் இடதுசாரிகள் மீது நடைபெற்ற தாக்குதல்களைப் போலவே, இப்போது திரிபுராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இத்தாக்குதல்கள் அனைத்துமே வெற்றியைத் தொடர்ந்து, தன்னெழுச்சியாக நடைபெற்ற தாக்குதல்கள் என்று சொல்வதற்கில்லை.   மாறாக, கட்சியையும் அதன் வெகுஜன அமைப்புகளையும்  பலவீனப்படுத்திடவும் அவற்றின் ஊழியர்களை மிரட்டிப் பணியவைத்திடவும் மேற்கொள்ளப்படும் ஓர் ஆழமான சூழ்ச்சித் திட்டமாகும்.

திரிபுராவில் நடைபெறும் நிகழ்ச்சிப்போக்குகளைப் பொறுத்தவரை, நாம் மேற்கு வங்கத்தில் கடந்த ஏழாண்டுகளில் ஏற்பட்ட அனுபவத்தைக் கிரகித்துக் கொண்டு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். மேற்கு வங்கத்தைப்போலவே, திரிபுராவிலும் கம்யூனிஸ்ட் இயக்கம் பல ஆண்டு கால வர்க்கப் போராட்டம் மற்றும் வெகுஜன இயக்கங்கள் மூலமாகவே கட்டப்பட்டதாகும்.  கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி சக்திகளுக்கு எதிரான அரசியல் எதிர்ப்பு என்பது ஆளும் வர்க்கங்களின் பகைமை மற்றும் வர்க்க நலன்களின் அடிப்படையில் அமைந்ததாகும்.  இவ்வாறு, திரிபுராவில் இடது முன்னணிக்கு ஏற்பட்ட தோல்வியைப் பயன்படுத்திக்கொண்டு,   கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக ஆளும் வர்க்கம் தாக்குதலைத் தொடுத்துள்ளது.  நம்மீது தாக்குதலைத் தொடுப்பவர்கள் எவ்விதமான ஜனநாயகக் கொள்கைகளையும், நாடாளுமன்ற நெறிமுறைகளையும் பின்பற்றிடவில்லை. நம்முடைய வெகுஜனத் தளங்களையும் கம்யூனிஸ்ட்டுகளின் செல்வாக்கையும் நசுக்குவதற்கு அவர்களுக்கு வன்முறை வெறியாட்டங்கள் மற்றும் அனைத்துவிதமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன.

திரிபுராவில், கட்சி, படிப்படியாக தன்னுடைய அணிகளை அணிதிரட்டிக் கொண்டிருக்கிறது. வன்முறை வெறியாட்டங்களுக்கு முடிவு கட்டக்கோரியும், வன்முறை வெறியர்களுக்கு எதிராக உறுதியானமுறையில் நடவடிக்கை எடுக்கக் கோரியும்,  காவல்துறையினரிடமும் அரசின் இதர அமைப்பினரிடமும் பெரும் திரளான முறையில் தூதுக்குழுவினர் சென்று கோரி வருகின்றனர். சில இடங்களில், மக்களுக்கு ரேஷன் வழங்கக் கோரியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலைகள் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, விளைவுகள் மிகவும் தெளிவானவை. நாட்டில் தற்சமயம் ஆட்சியிலிருக்கும் வலதுசாரிகள், இடதுசாரிகளின் வலுவான தளங்களை அழித்து ஒழித்திட ஏதாவது செய்திட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவ்வாறு வலதுசாரிகள் நமக்கு எதிராக ஏவியுள்ள தாக்குதல்களுக்கு எதிராக அரசியல் மற்றும் ஸ்தாபன நடவடிக்கைகளை எடுத்திடவும், மக்களைத் திரட்டி எதிர்ப்பியக்கங்களை நடத்திடவும், அவற்றின்மூலம்  மக்களுடனான நம் தொடர்புகளைத் தக்க வைத்துக் கொள்ளவும் கட்சி, அவசரகதியில் வேலை செயல்பட வேண்டியது அவசியம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக்குழுவும், இடது முன்னணியும் வீரஞ்செறிந்த போராட்டங்களையும், தியாகங்களையும் பெற்றவைகளாகும். 1988-93இல் மாநிலத்தில் அரைப் பாசிச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது, தங்களுடைய கடினமான போராட்டங்கள் மூலமாக அதனை வெற்றிகரமாக முறியடித்தவர்கள். இன்றைய ஒடுக்குமுறைக் கருப்பு காலத்தையும் அதேபோன்று பொடிப்பொடியாக்கி வெற்றி வாகை சூடுவார்கள் என்கிற நம்பிக்கை நமக்கு உண்டு.

(ஏப்ரல் 11, 2018)

(தமிழில்: ச. வீரமணி)

Leave a Reply

You must be logged in to post a comment.