சிதம்பரம்,
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வலியுறுத்தியும், தமிழகத்திற்கு துரோகமிழைக் கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் “காவிரியை மீட்போம்; தமிழகத்தைக் காப்போம்” என்ற முழக் கத்தோடு காவிரி உரிமை மீட்புப் பயணம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சி முக்கொம்பிலிருந்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் அரியலூரிலிருந்தும் புறப்பட்டனர். இந்த இரண்டு குழுக்களும் டெல்டாவின் கடைமடை பகுதியான கடலூருக்கு வியாழக்கிழமை (ஏப்.12) மாலை வந்தடைந்தது. பிறகு, இரு பயணக்குழுவும் சிதம்பரத்தில் ஒன்றாக இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து சிதம்பரம் அருகே கடவாச்சேரியில் விவசாயிகளை சந்தித்த அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்துரையாடினர். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,“ காவிரி உரிமை மீட்புப் பயணக் குழுக்களுக்கு வழியெங்கும் மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தின் மூலம் டெல்டா பகுதியில் உள்ள பொது மக்களும், விவசாயிகளும் விழிப்புணர்வு அடைந்துள்ளதை காணமுடிந்தது” என்றார். சென்னைக்கு வந்த பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என்று விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று முழு மனதோடு நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தை பாலைவனமாக மாற்ற முயற்சித்து வருகிறது. அதற்கு எடப்பாடி தலைமையிலான மாநில அரசும் துணை நிற்கிறது. கருப்பு கொடி காட்டுகிறார்கள் என்றால் அதனை ஏற்கும் தகுதி இருக்க வேண்டும். கடந்த காலங் களில் முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி உள்ளிட்ட வர்களுக்கு கருப்பு கொடி காட்டப்பட்டுள்ளது. அதை அவர்களும் ஏற்றுக்கொண் டுள்ளனர். ஆனால், இன்றைய தினம் கருப்பு கொடி கண்டனத்தை சந்திக்க திரணியற்ற பிரதமர் மோடி வானத்தில் பறந்து செல்கிறார். கருப்புகொடி கண்டனத்திற்கு பயந்து ஹெலிகாப்டரில் பறந்து செல்லலாம். ஆனால் ஓட்டு கேட்க தரைக்கு வந்து தான் ஆக வேண்டும். இந்த எதிர்ப்பு ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப் பாடு. இது எங்கள் உரிமை! இனியாவது விழித்துக் கொள்ளுங்கள், இல் லையென்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைக்கும் எங்கள் போராட்டம் ஓயாது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன் உள்ளிட்டோரும் பேசினர். பிறகு, அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் சிதம்பரம் நகரத்தை வந்தடைந்தனர்.முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையிலான இரண்டாவது பயணக்குழு காலை 10 மணிக்கு காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து குமராட்சி வழியாக சிதம்பரம் நகருக்கு வந்தது. பிறகு, இரு குழுக்களும் கடலூர் நோக்கி சென்றது. சிதம்பரம் நகருக்கு வந்த பயணக்குழுவை மார்க்சிஸ்ட் கட்சி நகரக்குழு மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave A Reply