பீகார் மகாதலித் சமூகத்தைச் சார்ந்த 23 வயது நிரம்பிய தேவ்சரண் குமார் மிஜோரமில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) பயின்று வந்தார். ”அப்பா நிங்கள் ரொம்ப லேட். நான் சாக விரும்பவில்லை. தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்” என்பதே அந்த மாணவர் பேசிய  கடைசி வார்த்தையக இருந்தது. தேவ்சரணின் சாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் நீதி கேட்டு மாணவர்கள் போராடி வருகின்றனர்.

தேவ்சரணின் தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டிருந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறிக்கை கூறுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு மற்றும் குடிநீர் மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாக தேவ்சரண் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். தேவ்சரணைப் போன்று தங்களுக்கும் தொண்டையில் புண் ஏற்பட்டிருந்ததாக சில மாணவர்கள் கூறுகின்றனர். உணவு விடுதிக் கட்டணம் என்று செமஸ்டருக்கு 30000 ரூபாய் வசூலிக்கப்படுகிற போதிலும், வழங்கப்படுகின்ற உணவில் பூச்சிகளும், புழுக்களும் இருப்பதாகக் கூறி தேவ்சரண் மரணத்திற்கு முன்னராக மூன்று முறை மானவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் இறங்கி இருந்தனர்.
தனியார் குத்தகைதாரர் ஒருவரிடம் உணவு விடுதி நடத்தும் பொறுப்பு விடப்பட்டிருக்கின்றது. மாணவர்கள் உணவு குறித்து புகார் தெரிவிக்கும் போதெல்லாம், ஹாஸ்டல் இருக்கும் பகுதி மிகவும் மோசமான இடத்தில் இருக்கிறது. எனவே எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என்ற பதில் மட்டுமே அவர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. தான் இறந்து போவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே விடுதியின் காப்பாளரான அஜ்மல் கோயாவிடம் தேவ்சரண் புகார் அளித்திருந்ததால், தேவ்சரணின் உடல்நிலை குறித்து விடுதிக்காப்பாளருக்கு நன்கு தெரியும் என்ற போதிலும், அது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை என்று மற்ற மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் இடைத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், தேர்வுப் பொறுப்பாளரான ஞானேந்திரா ஊருக்குச் செல்வதற்கும் தேவ்சரணை அனுமதிக்கவுமில்லை. தேவ்சரணின் மோசமான உடல்நிலையை வளாகத்தில் இருந்த அதிகாரிகள் கண்டு கொள்ளவேயில்லை. மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான பணம் தேவ்சரணிடம் இல்லாத நிலையில், அவருடைய நண்[பர்கள் அங்கிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு தங்களுடைய பணத்தைச் செலவழித்து தேவ்சரணை அழைத்துச் சென்றனர்.
முதலில் சில தேர்வுகளை தேவ்சரணால் எழுத முடிந்த போதிலும், பின்னர் நடைபெற்ற ஒரு தேர்வின் போது தேர்வு நடந்து கொண்டிருந்த அறையிலேயே அவர் மயங்கி விழுந்தார். துணைக்கென்று உடன் யாரையும் அனுப்பாமலேயே தேவ்சரணை அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது கல்லூரி நிர்வாகம். ஆனால், தேவ்சரணின் உடல்நிலை மோசமாக இருப்பதால், அவரால் பயணத்தை மேற்கொள்ள இயலாது என்று விமானநிலையத்தில் இருந்த அதிகாரிகள் அறிவித்ததால், தேவ்சரண் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேவ்சரணின் தந்தை ராம்விலாஸ் ராமால் பணம் செலவழித்து கௌஹாத்தியில் இருந்து மிஜோரம் வந்து தன்னுடைய மகனின் பொருட்களைப் பெற்றுக் கொள்ள இயலவில்லை. மாதம் 6000ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் அவர் தனனுடைய நண்பர்கள், உறவினர்களிடம் கடன் உதவி பெற்றே தேவ்சரணைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மருத்துவமனைக் கட்டணத்தைக் கட்டிய பிறகு தன்னுடைய வீட்டிற்கு மகனின் உடலை எடுத்துச் செல்ல முடியாத அவர் கௌஹாத்தியிலேயே தனது மகனின் பிணத்தை எரித்தார். தனது மகனின் உடலை இறுதியாகப் பார்க்க முடியாத தேவ்சரணின் அன்னையின் நிலைமையை விவரிக்க இயலாத அளவிற்கு இருந்தது.ங

வளாகத்தில் இருக்கும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை, வலாகத்திற்குள் நிலவுகின்ற அசுத்தமான சூழல் ஆகியவற்றிற்கு எதிராக மாணவர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். மத்தியமனிதவள மேம்மபாட்டு அமைச்சகம் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர். மாணவரின் மரணத்திற்குப் பொறுப்பேற்று ஞானேந்திராவும், கோயாவும் பதவி விலக வேண்டும், கல்லூரிக்குள் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றை உருவாக்கி மருத்துவ அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும், மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும், விடுதிகளில் அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும், மரணமடைந்த மாணவரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகலை முன்னிறுத்தி மாணவர்கள் போராடி வந்தததற்கு கல்லூரி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. ஐந்து நாட்களாக நிர்வாகத்தின் இந்தப் பாராமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரண்டு மாணவர்கள் கடந்த ஏப்ரல் 3 அன்று மண்ணெண்ணெய ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். 

இந்தப் பிரச்சனை மீது ஊடகங்கள் தங்களுடைய கவனத்தைத் திருப்புவதைத் தவிர்த்து வந்ததால், மாணவர்கள் பிற தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் ஆதரவைக் கோரினர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை, ஸ்ரீநகர், மேகாலயா, உத்தரகாண்ட், பாட்னா, மணிப்பூர் ஆகிய இடங்களில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் ஆகியோர் மிஜோரம் தேசிய தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். தேவ்சரண் மரனம் குறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் மாணவர்களிடம் இருந்தது. அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசுவதற்குத் தயாராக இல்லை.
கடந்த வெள்ளியன்று அங்கே வந்திருந்த மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி மாணவர்கள் கோரிக்கைகள் குறித்து எவ்வித அக்கறையும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. மாநில அரசு அதிகாரிகளை விசாரணைக் குழுவை ஏற்படுத்தி இந்த விவகாரம் குறித்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். அந்த விசாரணைக்குழு முழு அறிக்கையும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க ஒரு மாத காலம் ஆகலாம். நிவாரணம் குறித்து அமைச்சகமே முடிவெடுக்க வேண்டும் என்பதால் அதற்கு நீண்ட நாட்களாகலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மொத்த கல்விக் கட்டணமான இரண்டு லட்சம் ரூபாயில் 30000 ரூபாய உணவிற்கெனப் பெற்றுக் கொள்ளும் இந்த அரசு கல்வி நிறுவனம் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்குகூட மறுத்து வரும் நிலையே இன்னும் நீடித்து வருகிறது.

நன்றி https://thelogicalindian.com/exclusive/nit-mizoram-students-allege-infected-mess-food-negligence-of-management-led-to-death-of-a-23-yr-old/

தமிழில்: முனைவர் தா சந்திரகுரு விருதுநகர்

Leave A Reply

%d bloggers like this: