புதுதில்லி,
ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றால் நீதித்துறையும் பத்திரிக்கை துறையும் விரைந்து செயல்பட வேண்டும் என  உச்ச நீதிமன்ற நீதிபதி  குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேரள மீடியா அகாடமி மாணவர்களிடம் பேசிய குரியன்  ஜோசப் தனது ஓய்விற்கு பிறகு எந்த அரசாங்கப் பொறுப்பை ஏற்க மாட்டேன் என  தெரிவித்தார். அதே போல அவரது சக நீதிபதியான ஜே.எஸ்.சேலமேஸ்வரும் தனது பதவி ஓய்வுக்கு பிறகு எந்தவொரு அரசாங்க பதவியையும் வகிக்க போவதில்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீதிபதி குரியன் ஜோசப் கூறும்போது,“நீதி மற்றும் ஊடகம் ஆகிய இரண்டும் ஜனநாயகத்தின் காவற்காரர்களாக ( watch dogs) இருக்கின்றன. ‘காவல்நாய்கள்’ என்பவை ஏதாவது அச்சுறுத்தலை எதிர்கொள்ளும்  போது குரைக்கும் , அதன் மூலம் அவை உரிமையாளரை எச்சரிக்கை செய்யும். அதன் குரைப்பிற்கு பின்னும்  உரிமையாளர் எழுந்திருக்கவில்லை எனில் அது கடிக்க துவங்கும். குரைக்கிற நாய் எப்போதாவது தான் கடிக்கும் என்பார்கள், ஆனால் உரிமையாளர் ஆபத்தில் இருக்கும் போது அது கடிக்கும். அந்த உரிமையாளர் என்பது இங்கே ஜனநாயகம்” என புரிந்து கொள்ள வேண்டும் என  அவர் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் முன் போல  சுதந்திரமாக இல்லை எனவும் அவர் வருத்தப்பட்டார். நிருபர்கள் உண்மையை சொல்ல நினைத்தாலும் அவர்களின் முதலாளிகள் அவர்களுக்கு சாதகமான செய்தியின் பக்கத்தையே தர விரும்புகிறார்கள். இது ஜனநாயகத்துக்கு பேராபத்து எனவும் அவர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, மீது வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை தெரிவித்த மூத்த நீதிபதிகளில் ஒருவர்  குரியன் ஜோசப் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: