சென்னை, ஏப்.
அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம்  வசூலித்தாக எழுந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  எஸ்.சி., எஸ்.டி.ஆணையம் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜ்குமார், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பிய மனுவில், நீலகிரி மாவட்டம், கூடலூர் கல்வி மாவட்டம் பிதிர்காடு அரசு மேல்நிலைப்பள்ளியின் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை, எளியக் குழந்தைகள் மற்றும் மலைவாழ் கிராம மக்களின் குழந்தைகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
பிதிர்காடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கல்வித்துறை நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலித்து மாணவர்களை பல்வேறு இன்னல்கள் மற்றும் நெருக்கடிகளை கொடுத்து நிர்பந்தம் செய்து கட்டாயப்படுத்தி கூடுதல் கல்வி கட்டணம் வசூல் செய்துள்ளனர்.
மேலும் இந்தப் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததற்கான ரசீதும் வழங்கி உள்ளனர். இது குறித்து அந்தப் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டபோது, முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதி பெற்ற தீர்மானம் நிறைவேற்றி பணம் வசூல் செய்து வருகிறோம் எனத் தெரிவித்தனர்.
 1988ஆம் ஆண்டு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் பெற்றப் பணத்தை திரும்ப ஒப்படைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
இந்த மனுவின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்ச் 28ஆம் தேதி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அந்தக் கடிதத்தில், கடந்த மார்ச் 23ஆம் தேதி ராஜ்குமார் என்பவரிடம் இருந்து பெறப்பட்ட மனுவின் மீது 20 நாட்களுக்குள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்,  விசாரணை ஆணையத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி விசாரணை ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறை  இயக்குனர் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி உள்ள உத்தரவில், ராஜ்-குமார் என்பவர் அளித்துள்ள மனுவில், பள்ளிக்கல்வித்துறையின் மீது சில குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். நீலகிரியில் உள்ள பிதிர்காடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார் தெரிவித்துள்ளார். இந்த மனுவின் மீது துறைத்தலைவர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே லஞ்ச ஊழல் நடவடிக்கையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: