இன்று ஜெயகாந்தனின் மூன்றாவது நினைவு நாள்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருக்கையில், ஒரு மூத்த அதிகாரியோடு அவர் பணி முடிந்த பிறகு, இரவு 10 மணி வரை பேசிக் கொண்டிருப்பேன். அப்போது நான் சாதாரண ஒரு அரசு ஊழியர். அந்த அதிகாரியை, நேர்மைக்கு புறம்பாக செயல்படச் சொல்லி கடும் நெருக்கடி இருந்தது. அது பாண்டிட் குவின் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம்.

மிக மிக உறுதியாக அந்த அதிகாரி அந்த உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநர் திலகவதி. அவர் அந்த அதிகாரியை பல முறை நேரடியாக அழைத்து சிறுமைப்படுத்தினார். அந்த அதிகாரிக்கு அப்போது பேச வேறு யாரும் இல்லையோ என்னவோ. என்னையெல்லாம் ஒரு மனுசனாக மதித்து தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டுவார்.

அப்போது அவர் மனதில் இருந்து இயல்பாக கொட்டிய வரிகள்

“இந்த மாதிரியெல்லாம் நான் அவஸ்தை படுறதுக்கு இந்த ஜெயகாந்தன் பயதான் சங்கர் காரணம். அவன்கிட்ட போயி, அவன் நாவலை படிச்சிட்டு, மணிக்கணக்கா விவாதம் பண்ணிருக்கேன் சங்கர். சண்டை போட்ருக்கேன் சங்கர். ”

“அவனை படிக்காம இருந்தா இந்நேரம் எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாம இவங்க கேக்கறதை செஞ்சுட்டு போயிக்கிட்டே இருந்திருப்பேன் சங்கர்”

அவர் அப்போது சொல்லியபோது நான் ஜெயகாந்தனின் சினிமாவுக்கு போன சித்தாளு என்ற நாவலை மட்டுமே படித்திருந்தேன்.
மறுநாள் ஹிக்கின் பாதம்ஸ் கடைக்கு சென்று, அங்கே இருந்த மொத்த ஜெயகாந்தனின் படைப்புகளையும் வாங்கினேன். விடிய விடிய படித்தேன்.

இன்று நான் இப்படி இருப்பதற்கு யாராவது ஒருவர் காரணமென்றால், அது ஜெயகாந்தன் மட்டுமே.
அவரின் மூன்றாவது நினைவு நாளில்,

அவரை வணங்குவதை விட வேறு என்ன பேறு எனக்கு கிடைக்க முடியும் ?

Leave A Reply

%d bloggers like this: