ஈரோடு,
பவானிசாகர் அணையில் இருந்து, குடிநீருக்கு திறப்பதாக கூறி, 500 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து, பல லட்சம் ரூபாயை பொதுப்பணித்துறையினர் லஞ்சமாக பெறுகின்றனர் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக, 150 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்நீரை, 9 கூட்டு குடிநீர் திட்டங்கள், பவானி ஆற்றை ஒட்டிய பஞ்சாயத்து மற்றும் டவுன் பஞ்சாயத்துக்கள் பயன்படுத்துகின்றனர். இது போன்ற அமைப்புக்கு, 100 கனஅடி நீர் போதுமானது. தவிர, ஆற்றில் தண்ணீர் வரும் இடங்களில், பல ஊற்றுகள் உள்ளன. அந்த ஊற்றுகள் மூலமும், 100 முதல், 150 கனஅடிக்கு மேல் தண்ணீர் ஊறும். எனவே, 300 கனஅடி நீர் செல்கிறது. ஆனால், சனிக்கிழமை முதல், 500 கனஅடி நீரை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்துவிட்டு, ஆலைகள், அனுமதியின்றி நீரை உறிஞ்சுவோருக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.

பவானி ஆற்றில், ஆயிரத்து 50 இடங்களில் அனுமதி இன்றி, மின் இணைப்பு பெற்று, தண்ணீர் திருடப்படுகிறது. இந்த மின் இணைப்பை துண்டித்து, அந்த பம்ப்செட்களை அகற்ற வேண்டும், என மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு, இறுதி உத்தரவு வாங்கி, மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியும், அந்த வழக்கில் எவரும், மேல் முறையீடு செய்ய முடியாத வகையில், உத்தரவை பெற்றும், மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும், மின் வாரியமும் அவற்றை அகற்றாமல், விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.இது போன்ற அனுமதியற்ற நீர் உறிஞ்சும் பம்ப்செட்கள், ஆலை நிர்வாகங்கள் சார்பில் மாதம் தோறும், பொதுப்பணித்துறையினருக்கு பல லட்சம் ரூபாயை வழங்குவதால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதில்லை.

பவானிசாகர் அணையை நம்பி, பல பாசனங்கள் உள்ளன. மின் அணையில் இருந்து திறக்கப்படும் நீர், மழை நீர் போன்றவற்றை கொஞ்சம், கொஞ்சமாக சேகரித்து, பாசன பயன்பாட்டுக்கும், உயிர் நீராக பயன்படுத்தவும் முயன்று வருகிறோம். ஆனால், பல லட்சங்களை பெறும் அதிகாரிகள், ஒரே நாளில், 500 கனஅடி நீரை திறந்து, நாசம் செய்கின்றனர். இத்தனை பிரச்னைக்கு இடையே, சத்தியமங்கலம் அருகே, பல பண்ணைக்காரர்கள் சேர்ந்து, பல கிலோ மீட்டருக்கு அனுமதி இன்றி தண்ணீர் எடுக்க இணைப்பு போட்டுள்ளனர். இதனை தடுக்க, நடவடிக்கை எடுக்காவிட்டால், விவசாய அமைப்புகளை இணைத்து போராடும் நிலை உருவாகியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: