====ரமேஷ் &&& ராம்ஜி===                                                                                                                                                          அந்த கிராமத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக இன்னோவாக்களும் மாருதிகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதுநாள் வரை இந்திய வரைபடத்தில் அறியப்படாத கிராமத்தைப் போல இப்போது அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த கிராமத்தை நோக்கிப் படையெடுப்பு. ஆம். தூத்துக்குடியில் உள்ள குமரெட்டியாபுரம் கிராமம் தான் அது. ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் சகலவிதமான விதி மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் இன்றைக்கு நிதர்சன சாட்சியமாக விளங்கிக் கொண்டிருப்பது குமரெட்டியாபுரம் கிராமமும் அதன் மக்களும் தான். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 55 நாட்களாக தொடர்ச்சியான வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பவர்கள் அந்த கிராம மக்கள்.

பொதுவாக எங்கெங்கு அநீதிகள் இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஓடோடிச்சென்று உதவிக்கரம் நீட்டுவதோடு மட்டுமல்லாமல் போராடுகின்ற மக்களோடு மக்களாக தங்களது குரலை உயர்த்திப் போராடி வருபவர்கள் இன்சூரன்ஸ் ஊழியர்கள். தங்களது துறை சார்ந்த கோரிக்கைகளோடு நான்கு சுவர்களுக்குள் நில்லாமல், தொழிற்சங்கங்களின் சமூக அக்கறைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கி வருவது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். கடந்த ஏப்ரல் 6ம் தேதி மதுரைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், நெல்லைக் கோட்டக் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் ஸ்டெர்லைட் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி ஒரு நாள் முழுவதும் அவர்களோடு போராட்டக்களத்தில் இணைந்து நிற்பது என்ற முடிவின் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட இன்சூரஸ் ஊழியர்கள் உணர்வுப்பூர்வமாக பங்கேற்றனர். இந்த நிகழ்வில் முக்கியமாக மகளிர் ஊழியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.ஸ்டெர்லைட் ஆலை துவக்கப்பட்ட போது அதன் அபாயங்களைப் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்பகுதி மக்களிடம் எடுத்துரைத்தது அதை செவிமடுக்கும் அளவிற்கு விழிப்புணர்வு எட்டாத அந்த கிராம மக்கள் இன்றைக்கு ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்புகள் விஸ்வரூபம் எடுத்திருப்பதை நேரில் கண்டு வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையின் கதவுகள் இழுத்து மூடப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் என உறுதிபடத் தெரிவிக்கின்றனர் குமரெட்டியாபுரம் கிராம மக்கள்.போராடும் குமரெட்டியாபுரம் மக்களை சந்திக்க மாநில அமைச்சர்களுக்கோ முதலமைச்சருக்கோ இன்னும் நேரம் கிடைக்கவில்லை!

துரதிருஷ்டவசமாக இன்றைக்கு பிரதான மீடியாக்களும் ஸ்டெர்லைட் பிரச்சனையை நோக்கி தங்கள் கேமராக்களைத் திருப்ப மறுக்கிறார்கள். கூவத்தூர் பிரச்சனையை நேரலை செய்திட்ட மீடியாக்கள், மான் வேட்டை பிரச்சனையைப் பற்றி இடைவிடாமல் பேசும் மீடியாக்கள், கார்ப்பரேட்டுகளால் மக்கள் வேட்டையாடப்படுவதைப் பற்றி வாய் திறக்க மறுக்கின்றன.
குமரெட்டியாபுரம் மக்கள் போராடுவது தங்களின் வாழ்வாதாரத்திற்காக மட்டுமல்ல, உழைப்பாளி மக்களின் வாழ்க்கையை சூறையாடும் உலகமயக் கொள்கைகளுக்கெதிரான போராட்ட இயக்கங்களின் ஒரு பகுதியாகும்.

ஜல்லிக்கட்டு போராட்டம், மகாராஷ்டிரா விவசாயிகளின் எழுச்சி மிக்க போராட்டம் ஆகியவற்றில் வெற்றிக்கனியை சுவைத்த உழைப்பாளி வர்க்கம், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்திலும் வெற்றி முத்திரையைப் பதிப்பார்கள் என்பது திண்ணம். 25 ஆண்டுகளுக்கு மேலாக உலகமயத்தை எதிர்த்த போராட்டத்தில் முக்கிய தடம் பதித்த இன்சூரன்ஸ் ஊழியர்களின் உறுதிமிக்க போராட்டப் பயணம் மேலும் உத்வேதத்துடன் தொடரும்.• குமாரெட்டியாபுரத்தில் துணிகளுக்கு சலவை செய்யும் தொழிலாளி கருப்பசாமி… ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஒருநாளும் சென்றதில்லை; ஆனால் அவருக்கு தொண்டையில் புற்றுநோய். பெரும் செலவில் ஆப்ரேசன் செய்துள்ளனர். நம்மிடம் பேசமுடியாமல் பேசுகிறார்… புகையிலை, பொடி, வெத்தலை பாக்கு போடும் பழக்கமுண்டா என்று கேட்டதற்கு பதறிப் போய் அதுக்கெல்லாம் காசு ஏது என்று வெகுளியாய் பதிலளிக்கிறார் கருப்பசாமி.

பால்ராஜின் உடலில் தோல் கேன்சர். பாதங்களும், தொடைகளும் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றன. இடது கை மரத்துப் போய் உள்ளது. அவர் பார்க்கும் வேலை என்ன தெரியுமா… ஆடு மாடு மேய்த்தல்.. குமரெட்டியாபுரத்தில் மட்டும் இவர் போல் நான்கு பேர் உள்ளன…

பஸ் ஸ்டாப்ப்பிற்கு அருகில் உள்ள அடி பம்பில் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. கருப்புநிற படிமமும் காணப்படுகிறது. சமீபத்தில் நடிகர் சரத்குமார் மக்களைப் பார்க்க வந்த போது, அந்த நீரை சற்று குடித்ததால் சுகவீனம் ஆகிவிட்டாராம். குமரெட்டியாபுரம் ஊர் முழுவதும் தண்ணீர் நிற்கும் இடங்களில் வெள்ளை வெள்ளையாய் திட்டுகள். அந்த ஊரில் உள்ள குளம் பார்ப்பதற்கே பயங்கரத் தோற்றத்துடன், வெண்ணிற படிமங்களோடு காட்சியளிக்கிறது. அந்த ஊர் மக்கள் தங்கள் குடிப்பதற்கும், அவர்கள் வளர்க்கும் ஆடுமாடு குடிப்பதற்கும் தண்ணீர் காசு கொடுத்து தான் வாங்குகின்றனர்.60 நாட்களை தொடப்போகும் குமாரெட்டியாபுரம் மக்களின் தொடர் போராட்டம், இரவு பகலாக நடக்கிறது. குழந்தைகளுக்கு தொட்டில் போராட்ட களத்திலேயே கட்டப்படுகிறது. சிறுவர்கள் அங்கு அமர்ந்து தான் “ஹோம் ஒர்க்” செய்கின்றனர்.

போராட்டத்தின் நடுவே ஆலையின் கழிவுகளால், நச்சுப் புகையினால் இறந்த அந்த கிராம மக்களுக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு மிகவும் உருக்கமாக இருந்தது. ஸ்டெர்லைட் மூடும் வரை போராட்டத்தை நிறுத்தோம் என்று கூறி அஞ்சலி..!

குமாரெட்டியாபுரத்திலிருந்து பண்டாரம்பட்டி கிராமத்திற்கு சென்றோம். தொழிற்சங்கம் என்ற அளவில் நீங்கள் தான் முதன் முதலில் வந்துள்ளீர்கள் … எங்களின் வாழ்க்கையைப் பற்றி உலகுக்குச் சொல்லுங்கள் என்று கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர் அம்மக்கள். எலும்புக்கூடான மக்களையும், காய்ந்த சருகு போல் உள்ள ஊரினையும், அதிகாரத்தின் உச்சத்தோடு அமர்ந்திருக்கும் ஸ்டெர்லைட் கொலைக் களத்தையும் பார்த்தபடி கனத்த மனதோடு திரும்பினோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.