மதுரை:
மதுரை மண்ணின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.அர்ஷியா காலமானார். அரவது திடீர் மறைவுக்கு மதுரை மாநகர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆழ்ந்த அதிர்ச்சியையும், அவரது மறைவால் துயருற்று வாழும் அவரது குடும்பதினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகர் மாவட்ட தமுஎகச தலைவர் ஸ்ரீரசா, மாவட்டச் செயலாளர் அ.நா.சாந்தாராம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு –                                                                                                         மதுரை மாநகரின் பெருமை மிகு எழுத்தாளரும், இதழியலாளருமான தோழர் எஸ்.அர்ஷியாவின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிப்பதும், துயரமளிப்பதும் ஆகும். மதுரை மண் சார்ந்த எழுத்துக்களைத் தொடர்ந்து படைப்பிலக்கியமாக உருவாக்கியதில் எஸ்.அர்ஷியா தனித்துவமான எழுத்தாளராகத் திகழ்ந்தவர். ஏழரைப் பங்காளி வகையறா, பொய்கைகரைப்பட்டி, அப்பாஸ்பாய் தோப்பு, கரும்பலகை, அதிகாரம், சொட்டாங்கல், நவம்பர் 8, 2016 ஆகிய நாவல்களையும், கபரஸ்தான் கதவு, மரணத்தில் மிதக்கும் சொற்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், நிழலற்ற பெருவெளி, திப்பு சுல்தான், பாலஸ்தீன், மதுரை நாயக்கர் வரலாறு, பாலைவனப்பூ, கோமகட்டுமாரு ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களையும் சரித்திரப் பிழைகள் என்கிற கட்டுரைத் தொகுப்பையும் தனது பங்களிப்பாகத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஆக்கித் தந்தவர் எஸ்.அர்ஷியா.

கடந்த பத்தாண்டுக் காலத்தில் மிகுந்த காத்திரமான படைப்புகளை உருவாக்கி, எழுத்துலகின் கொடுமுடிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் எஸ்.அர்ஷியாவின் இந்த அகால மரணம் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பே.

தராசு இதழில் சிறப்பான புலனாய்வுப் பத்திரிகையாளராகத் தம் எழுத்துவாழ்க்கையைத் தொடங்கிய எஸ்.அர்ஷியா, பின்னர் தீக்கதிர் நாளிதழில் இரண்டு ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். ஆரம்ப காலத்தில் பல்வேறு பிரபல வார இதழ்களில் சிறுகதைகளைப் படைத்தார். பின்னர் தம் எழுத்துக்களைக் கூர்மையான இலக்கியத் தன்மையோடு மாற்றியமைப்பதில் கவனம் செலுத்தினார். செம்மலர், தாமரை போன்ற இலக்கிய இதழ்களிலும், பல்வேறு இலக்கிய இதழ்களிலும் காத்திரமான சிறுகதைகளை எழுதினார். ஏழரைப் பங்காளி வகையறா என்கிற ஓர் அபூர்வ வகைச் சமகால வரலாற்றை நாவலாக்கியதிலிருந்து அவரது நாவல் இலக்கியப் பயணம் துவங்கியது. அவரது முதல் நாவலே, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது பெற்றது.

என்றாலும் அனைத்தையும் தாண்டி, பொய்கைகரைப்பட்டி, அப்பாஸ்பாய் தோப்பு, கரும்பலகை, அதிகாரம், சொட்டாங்கல், நவம்பர் 8, 2016 எனத் தொடர்ச்சியாக நாவல்களைப் படைத்தளித்தார். அவரது திப்பு சுல்தான் மொழிபெயர்ப்பு நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதைப் பெற்றது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் எழுத்துலகில் தொடர்ச்சியாக, அசுரத்தனமான எழுத்துழைப்பை வழங்கி, இலக்கிய ஆளுமையாத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்.
அவரை இழந்து வாடும் அவரது மனைவி, மகள் ஆகியோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறியள்ளனர்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் அஞ்சலி
எழுத்தாளர் அர்ஷியா மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் இராமலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

எழுத்தாளர் அர்ஷியா உடலுக்கு தமுஎகச, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் – கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் என்.நன்மாறன், இரா.ஜோதிராம், தீக்கதிர் மூத்த ஆசிரியர் வி.பரமேசுவரன், பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், நிர்வாக மேலாளர் ஜோ.ராஜ்மோகன், என்சிபிஎச் நிர்வாக மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, மதுரை மாவட்ட முன்னாள் மைய நூலகர் பாண்டுரங்கன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.