கொல்கத்தா, ஏப்.7-

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள பஞ்சாயத்துத் தேர்தலையொட்டி, திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறை வெறியாட்டங்களில் ஒன்பது தடவை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்த பாசுதேவ் ஆச்சார்யா உட்பட பலர் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இதற்கெதிராக நாடு முழுதும் தன்னிச்சையான முறையில் கண்டனக்கணைகள் எழுந்துள்ளன.

எழுபது வயது நிறைந்த பாசுதேவ் ஆச்சார்யா, இடதுசாரிக் கட்சிகள் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்திடும் வேட்பாளர்களுடனான பேரணியில் தலைமை தாங்கி சென்றபோது, அவரை திரிணாமுல் குண்டர்கள் கம்புகளால் நையப்புடைத்துள்ளனர், ஒருவன் இரும்புக் கம்பியால் அவரது வயிற்றில் குத்தியிருக்கிறான். கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான பாசுதேவ் ஆச்சார்யா புருலியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக, அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் இன்னும் ஆபத்தான நிலையிலேயே இருந்து வருகிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் மாநிலம் முழுதும் 160க்கும் மேற்பட்ட இடங்களில் இடதுசாரிக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல்கள் தொடுத்துள்ளது. இடதுசாரி ஊழியர்களுக்கு சொந்தமான 84 கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. தேர்தல் நடைபெற்றபின்னர் கடந்த சில நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை பத்து அரசியல் கொலைகள் நடைபெற்றுள்ளன. இதில் நான்கு திரிணாமுல் கட்சிக்குள்ளேயே நடைபெற்ற உள்கட்சிக் கொலைகளாகும்.

முன்னதாக, தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி பொதுச்செயலாளரான டாக்டர் ராமச்சந்திர டோம் கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளானார். அடுத்த நாள் இவ்வாறு பாசுதேவ் ஆச்சார்யா தாக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் ராமச்சந்திர டோம் மற்றும் பாசுதேவ் ஆச்சார்யா தாக்கப்பட்டமைக்கு நாடு முழுதும் கண்டன இயக்கங்கள் தன்னிச்சையாக நடைபெற்றுள்ளன. மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சிக்குழுக்களின் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான டாக்டர் சுஜன் சக்ரவர்த்த தாக்குதல்களைத் தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டித்துள்ளார்.  தலைநகர் தில்லியில் இன்றைய தினம் (சனிக்கிழமை) நாடாளுமன்ற வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஹன்னன்முல்லா முதலானோர் கண்டன உரையாற்றினார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.