செஞ்சி வட்டம் பென்னகர் கிராமத்தில் செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் பெ.லெனின், பள்ளிக் கல்வித் துறையின் தொன்மை பாதுகாப்பு மன்றஒருங்கிணைப் பாளர் அண்ணமங்கலம் நா.முனுசாமி, பென்னகர் அரசு உயர்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் மற்றும் மன்ற பொறுப்பு ஆசிரியர் எஸ்.சரவணன், பா.இராமன், எஸ்.தண்டபாணி ஆகியோர் தொல்லியல் சார்ந்த கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செஞ்சியிலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் பென்னகர் கிராம சாலை ஓரம் 1.15 மீட்டர் நீளமும் 70 செ.மீ சுற்றளவும் கொண்ட பீரங்கி ஒன்றை கண்டுபிடித்தனர்.

இந்த பீரங்கி பற்றி தொல்லியல்அறிஞர்கள் கூறும்போது, “வந்தவாசிப் போரில் ஆங்கிலேயர்கள்அல்லது பிரெஞ்சுக்காரர்கள் இந்த பீரங்கியை பயன்படுத்தி இருக்கலாம். செஞ்சிக் கோட்டைப் போரில் ராஜாதேசிங்கிற்கு எதிராக ஆற்காட்டு நவாப்பின் படைகளும் இந்த பீரங்கியை பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது” என்றனர்.

திருவண்ணமலை மாவட்டத்தில்உள்ள வந்தவாசி கோட்டையை பிரெஞ்சுப் படையினர் தக்கவைத்திருந்தனர். இதை கைப்பற்றினால் ஒழிய இந்தியாவில் முழுமையான ஆங்கிலேயர் ஆதிக்கம் சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் கி.பி.1760ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ஆங்கிலேயத் தளபதி சர் அயர் கூட் தலைமயில் பெரும் வீரர்களையும், பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதத் தளவாடங்களையும் கொண்ட ஆங்கிலேயர் படை வந்தவாசிக் கோட்டையை முற்றுகையிட்டனர். வந்தவாசிக் கோட்டையைக் காக்கும் பொறுப்பில் பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர் லாலி ஆங்கிலப் படையை எதிர்த்து நின்றார். கோட்டை ஆங்கிலேயர் வசமானது. பின் ஆட்சி கி.பி.1947 ஆகஸ்ட் வரை நீடித்தது. இந்தப் போரில் பயன்படுத்த எடுத்துச் சென்ற பீரங்கியாக இது இருக்கலாம்.

இது பழுதடைந்ததால் சாலை ஓரத்தில் போர் வீரர்கள் வீசிவிட்டு சென்றிருக்க வாய்ப்புண்டு என்றும் அவர்கள் கூறினர்.கி.பி.1714ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆற்காட்டு நவாப் சாதத்துல்லகானுக்கும் செஞ்சியை ஆண்ட ராஜாதேசிங்கிற்கும் செஞ்சி அருகே கடலி கிராமத்தில் நடந்தபோரில் நாவாப்பின் படைகள் தேவனூரில் முகாமிட்டு அங்குள்ள சிவனாலயத்தையும் அண்ணமங்கலம் சிவனாலயத்தையும் இடித்து தரைமட்டமாக் கினர். செஞ்சிக்கோட்டை ஆற்காட்டு நவாப்பின் வசமானது. அந்த போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி இன்றளவும் தேவனூரில் உள்ளது.

நவாப்பின் படைகள் பென்னகர் கிராமத்தில் முகாமிட்டு செஞ்சியை தாக்க திட்டமிட்டுள்ளதற்கும் வாய்ப்புள்ளது. மேற்கண்ட போரிலும் இந்த பீரங்கியை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தனர்.பென்னகர் கிராமத்தை சுற்றியுள்ள கிராமமான தேவனூர் கிராமத்தில் தேரடி வீதியில் ஒரு பீரங்கி தற்போது உள்ளது. அதேபோல் சாத்தாம்பாடி கிராமத்தில் ஏரியில் இருந்த பீரங்கியை தமிழக அரசு கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: