சாதாரண மக்களின் குரலாக பலவரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதி மன்றத்தின் சமீபகாலங்களின் தீர்ப்புகளும், செயல்பாடுகளும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை. காவிரிநீர் பிரச்சனை 100 ஆண்டுகளுக்கு மேலானது. ஆளுகிறவர்களின் பாரபட்ச அணுகுமுறை, அற்ப சுயநல அரசியல் காரணங்களால் இது மேலும் நீண்டுகொண்டே போகிறது. சில நேரங்களில் நீதித்துறையின் கறார் தன்மை இல்லாத நிலையும் மத்திய ஆட்சியாளர்களின் இழுத்தடிப்பிற்கு காரணமோ என எண்ணத் தோன்றுகிறது.

கடந்த காலங்களில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் கேட்டு நடைபெற்ற எழுச்சிமிகு போராட்டங்கள் ஏற்படுத்திய அழுத்தத்தால், தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலால், 1990ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம்அமைக்கப்பட்டது. அன்றைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா இருந்தார். காவிரி நடுவர்மன்றம் அமைக்கச்சொல்லி 1971ம் ஆண்டுமுதல் உச்சநீதிமன்றம் சொல்லி 20 ஆண்டுகள் ஆகியும் அமைக்காத மத்திய அரசை அவர் கடுமையான வார்த்தைகளால் கண்டித்தார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கான தண்ணீர் பங்கீடு சம்மந்தமாக கர்நாடக அரசுகாவிரி டெல்டா மாவட்டங்களில் நிலத்தடிநீர் 10 டிஎம்சி உள்ளதை கணக்கில் கொள்ளவேண்டும் என்று வாதம் செய்தது. ஆனால் நீதிபதிகளோ கர்நாடக அரசின் அந்த பிடிவாத போக்கை நிராகரித்து ஏற்க மறுத்தார்கள் அன்று..!ஆனால்… இன்று…? பிப்16 உச்சநீதிமன்றம் காவிரியில் தமிழகம், கர்நாடகம் தண்ணீர் பங்கீடு வழிகாட்டுதலில் டெல்டாமாவட்டங்களில் நிலத்தடிநீர் 10டிஎம்சி உள்ளதாகவும் அதை தமிழ்நாடு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்என்று சொல்கிறது. கடல் முகத்துவாரங்களில் ஏற்பட்டுள்ள அரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடல் மட்டம் மேலே ஏறியுள்ளதும், அதனால் உப்புநீர் மேலேறியதால் மிகவேகமாக நிலத்தடிநீர் உப்புநீராக மாறிவருவதையும் தொடர் வறட்சியால் இயல்பாகவே நிலத்தடிநீர் மட்டம் குறைந்து போனதும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்ணில் மறைந்துபோனது ஏனோ? காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இறுதிக்கெடு மார்ச் 29ம்தேதி உடன் முடிவடைந்தது.

தமிழகஅரசு மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இதுகுறித்து திங்களன்று (02. 04. 2018) உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக் கறிஞர் உமாபதியிடம், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ‘ஸ்கீம்’; என்று சொல்லப்பட்டுள்ள வார்த்தை மேலாண்மை வாரியம்தானா? எனக் கேள்வி எழுப்பி அது மேலாண்மை வாரியம் இல்லை என்று கூறி மத்திய அரசின் வாதத்தை வழிமொழிந்துள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற நான்கு மூத்த நீதிபதிகள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சொன்ன குற்றச்சாட்டுகள் மீண்டும் நம் கண்முன்னே எழுந்து நிற்கிறதே..!

காவிரியில் தமிழகத்தில் உரிய தண்ணீர் பங்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி, அந்த நம்பிக்கையை வரும் அமர்வுகளில் நிறைவேற்றுவார்களா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பங்கீட்டை உறுதிப்படுத்திட காவிரி மேலாண்மை வாரியமே நிரந்தரத் தீர்வு;அதை நிறைவேற்றிட மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெறும் போராட்டக் களமே உதவும்!

– வீ.அமிர்தலிங்கம்மாநிலப் பொதுச்செயலாளர் (பொ)அ.இ.வி.தொ.ச.

Leave a Reply

You must be logged in to post a comment.