புதுக்கோட்டை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
பாஜக அப்பட்டமான வாக்கு வங்கி அரசியல் செய்கிறது. கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில் வைத்து வாக்கு அரசியலுக்காகவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பை துச்சமென நினைக்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கையின் காரணமாகத்தான் தமிழக மக்களின் போராட்டம் நாளுக்குநாள் வலுத்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய முழு அடைப்புப் போராட்டம் வெற்றியடைந்துள்ளது. மத்திய அரசு ,காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் நீடிக்கும்.

முதல்வரும், துணை முதல்வரும் ஆளுநரை சந்தித்து அவரை திருப்தி அடையச் செய்திருக்கலாம். ஆனால் மக்களை அவர் திருப்தி அடையச் செய்யவில்லை. வெறுப்படையும் நோக்கிலேயே செயல்பட்டு வருகின்றனர். காவிரி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறுவதற்கெல்லாம் பதில் அளிக்க முடியாது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல, மத்திய அரசு அலுவலகங்கள் எதுவும் செயல்பட முடியாத நிலை ஏற்படும்.

‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் தங்களால் தமிழகத்தில் கட்சி நடத்த முடியாது’ என்று தனது தலைமைக்கு தமிழக பாஜக நிர்வாகிகள் வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக தமிழக பாஜகவினர் அறிவிக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டியது தமிழக முதல்வரின் பொறுப்பு. யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக உண்ணாவிரதப் போராட்டம் எனும் நாடகத்தை முதல்வர் அரங்கேற்றியுள்ளார். இது தமிழக மக்களை ஏமாற்றும் வேலை.
இவ்வாறு முத்தரசன் கூறினார். போட்டியின் போது மாவட்டச் செயலாளர் மு.மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: