ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து கறுப்புக்கொடியுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மனு அளிப்பதற்காக பரங்கிப்பேட்டையிலிருந்து ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்புக்குழுவினர் கைகளில் கறுப்புக்கொடிகளுடன் வந்திருந்தனர். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அவர்கள் இத்திட்டங்களை கைவிடக் கோரி திடீர் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாதென எச்சரித்து அவர்களை மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவில், சுனாமி மற்றும் இயற்கை பேரிடர்களால் கடலூர் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அழிந்துவிட்டன. மண் வளம், நீர்வளம் ஆகியனவும் சீர்குலைந்து மீனவர்கள், விவசாயிகள் தங்கள் எஞ்சியுள்ள வாழ்வாதாரங்களுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் வகையில் கிழக்கு கடற்கரைச்சாலை வழியில் பரங்கிப்பேட்டை மார்க்கமாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இத்திட்டம் பொதுமக்களுக்கு ஏற்புடையது அல்ல.எனவே, இயற்கை வளம், மனித உயிர், வருங்காலத் தலைமுறையினருக்கான வாழ்வாதாரங்களை பாதுகாத்திடவும் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.