ரிபப்ளிக் டிவி அர்னாபின் கத்தல்களுக்கு ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் பதில்  

சமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் ஊடுருவி, தவறான போலியான செய்திகளைப் பரப்புவதன் மூலமாக தங்களை அரசிற்கு ஆதரவாக நிறுவிக் கொண்டுள்ளவர்களுக்கு எதிராக, அவர்கள் வெளியிடுகின்ற செய்திகளில் இருக்கும் போலித் தன்மையைத் தோலுரித்துக் காட்டி உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கும் இணையதளம் ஆல்ட் நியூஸ் (https://www.altnews.in/). பத்திரிகைகளில் வெளிவராத அல்லது அவற்றால் முக்கியத்துவம் தரப்படாத சாதி சார்ந்த வன்முறைகள், மதரீதியான பாகுபாடுகள், தொழிலாளர் போராட்டங்கள், விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பான செய்திகளையும் ஆல்ட் நியூஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது. வாட்ஸாப் போன்ற சமூக ஊடகங்கள் போலியான செய்திகளப் பரப்புவதற்கான ஊற்றுக் கண்ணாகச் செயல்பட்டு வரும் இக்காலகட்டத்தில் ஆல்ட் நியூஸின் சேவை மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது. போட்டோஷாப் அரசின் பல்வேறு பொய்களைத் தோலுரித்துக் காட்டியிருக்கும் இந்த இணையதளத்தின் மீது அர்னாப் கோஸ்வாமி போன்றவர்களின் கோபம் என்பது எதிர்பாராத ஒன்றல்ல. அண்மையில் ஆல்ட் நியூஸ் இணையதளத்திற்கு எதிராக அர்னாப் தன்னுடைய வேறொரு நிகழ்ச்சியை வளைத்து நடத்தியது குறித்து ஆல்ட் நியூஸ் இணையதளத்தில் வெளியாகி உள்ள கட்டுரை இங்கே.

ரிபப்ளிக் டி.வி. ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சியில் தொடர்ந்து போலியான செய்திகளை வெளியிடும் போஸ்ட் கார்டு நியூஸ் என்ற இணையதளத்தை நிறுவிய மகேஷ் ஹெக்டேவை கைது செய்தது பற்றி விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஆல்ட் நியூஸ் பற்றிப் பேசுகின்ற வரையிலும் அந்த விவாதம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் வேடிக்கையாகவே இருந்தன. கலந்து கொண்டவர்களில் எவரையும் பேச விடாது அர்னாப் கோஸ்வாமி மட்டுமே இடைவிடாது உச்சஸ்தாயில் பேசிக் கொண்டே இருந்தார். நீண்ட நேரத்திற்கு அவருடைய பேச்சு அடங்கவே இல்லை.

உண்மையில் விபத்தில் காயமடைந்த ஜெயின் சாமியார் ஒருவர் முஸ்லீம் இளைஞர்களால் தாக்கப்பட்டார் என்பதாக போலியான செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்காக மகேஷ் ஹெக்டே கைது செய்யப்பட்டிருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த செய்தி. முஸ்லீம் இளைஞர்கள் தாக்கியதாக வெளியான அந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய போது, ஆல்ட் நியூஸ் அந்தச் செய்தி போலியானது என்றும் தவறான கெட்ட நோக்கத்துடன் அது வெளியிடப்பட்டது என்றும் கண்டறிந்து அதன் பின்னால் இருந்த உண்மையை வெளிக் கொணர்ந்தது. அவ்வாறு செய்ததன் மூலம் ஆல்ட் நியூஸிற்கு இருந்த அரசியல் சமநிலையை கேள்விக்குள்ளாவதற்கு அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி ஆகியவற்றால் மட்டுமே முடியும். அப்பாடி!

தன்னிடம் இருந்த மைக்கை முழு சப்தத்துடன் வைத்திருந்த அர்னாப் அந்தப் பெயரைக் கேட்டவுடனே, “நீங்கள் ஆல்ட் நியூஸ் பற்றி சொன்னீர்கள்” என்று உரக்க கத்தினார். அதற்குப் பிறகு ‘விவாதம்’ என்று அழைக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் யாராவது பேச முயன்றால், அவர்களை இடைமறித்து “ஆல்ட் நியூஸ் அரசியல் சமநிலையோடு செயல்படுவதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் அனைவரிடமும் நான் இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன்.” என்று அவர் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். போஸ்ட் கார்டு வெளியிட்ட அந்த போலியான செய்தி பற்றி விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சி திடீரென்று ஆல்ட் நியூஸ் பற்றியதாக மாறியதைத்தான் அவர்கள் அரசியல் சமநிலை என்று கருதினார்கள் போலும். அரசியல் சமநிலையின் அதிகார மையமாக தன்னைக் கருதுகின்ற அர்னாப், துரதிர்ஷ்டவசமாக அங்கே அந்த நிகழ்ச்சிக்குள் வந்து சிக்கிக் கொண்டவர்களிடம் தன்னுடைய உரையை இடைவிடாது நிகழ்த்திக் கொண்டே இருந்தார்.

இங்கே இணைக்கப்ப்ட்டிருக்கும் வீடியோ அர்னாப் ஆல்ட் நியூஸ் பற்றி பேசியவற்றைக் காட்டுகிறது. அந்த முழு நிகழ்ச்சியையும் இங்கே காணலாம் (http://www.republicworld.com/the-debate/306/626/is-the-arrest-about-fake-news-or-one-involving-political-ideologies).

ஜமா மசூதி மின்கட்டணத்தைச் செலுத்தவில்லை என்பதாக போஸ்ட் கார்டு வெளியிட்ட போலிக் கதையை அடிப்படையாகக் கொண்டு, ​​ரிபப்ளிக் டிவி கடந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்திய போது தன்னுடைய விரல்களைச் சுட்டுக் கொண்டது. அந்தச் செய்தியில் உண்மை இல்லை என்று ஆல்ட் நியூஸ் தெளிவுபடுத்திய பிறகு, கோபமடைந்த அந்தச் சேனல் பின்னர் அந்த வீடியோவை முழுமையாக நீக்க வேண்டி வந்தது. ஆனால் அது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டதால், அர்னாப் ஒருவேளை அந்த இக்கட்டான நிலையை மறந்திருக்கலாம் என்பதால், நாம் அர்னாபை இப்போது குற்றம் சொல்ல முடியாது. ஆல்ட் நியூஸ் எப்போதும் போல போலிச் செய்திகளைத் தோலுரித்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இதே போன்று சில முறை ரிபப்ளிக் டிவியோடு மோதல்களும் நடந்திருக்கின்றன. எனவே “போஸ்ட்கார்டு ஒரு புறம் சாய்ந்து கொண்டிருக்கிறது என்றால், ஆல்ட் நியூஸ் மறுபுறம் சாய்ந்து இருக்கிறது” என்று கூறி போஸ்ட் கார்ட் நியூஸ், ஆல்ட் நியூஸ் ஆகியவற்றிற்கிடையே நகைச்சுவை மிகுந்ததொரு சமன்பாட்டை அர்னாப் எடுப்பதன் மூலமாக அவரிடம் இருக்கும் எரிச்சல்களை நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

“இடதுசாரிகள் அல்லது காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சிகளின் பக்கமாகச் சாய்ந்து அவர்களை ஆதரிக்கும் வகையிலான கட்டுரைகளை எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஒருபக்கச் சார்பு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். உண்மைகளைச் சரி பார்க்கும் இணையதளங்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்வதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை” என்று ஒருபக்க மேடையில் நின்று பேசிக் கொண்டிருக்கும் அவர் முழங்கினார்.

நாங்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்தபோது அதைப் பார்த்து சிரித்த எங்களுடைய வாசகர்கள், அர்னாபின் கத்தலை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம், அர்னாபிற்குப் நாம் பதிலளிக்கத் தேவையில்லை என்று அவர்கள் எங்களை அறிவுறுத்தினார்கள். அவருடைய வாதத்தில் அவர் முக்கியமாகக் கூறுவதைத் தேர்ந்தெடுத்து அது உண்மைதானா என்பதைச் சரிபார்க்க நாங்கள் முயற்சிக்கிறோம்.

“உங்கள் அனைத்து கட்டுரைகளும், உண்மை பற்றிய உங்கள் அனைத்துச் சோதனைகளும் ஒரே பக்கத்தில் இருப்பவையாக மட்டுமே உள்ளன … .. உண்மையைச் சரிபார்க்கும் இணையதளங்கள் ஒரே அரசியல் பக்கம் நின்று அவர்களுக்காக வாதாடுபவையாக இருக்கக்கூடாது. எப்போதுமே அப்படி இருக்கவில்லை என்றாலும், அவ்வப்போதாவது அவ்வாறு இருப்பதற்கு முயல வேண்டும். மற்ற பக்கமிருந்து வருகின்ற செய்திகளையும் திருத்தி வெளியிட வேண்டும். தொடர்ந்து காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சி அல்லது இடதுசாரிகளுக்காக வாதிட முயலக் கூடாது. அவ்வாறு நடந்து கொண்டால் அவர்களுடைய நற்சான்றுகள் கேள்விக்குள்ளாக்கப்படும்” என்று அர்னாப் கூறியிருந்தார்.

மற்றொரு சேனல் வெளியிட்ட தகவலை ட்வீட் செய்த பாஜகவின் தகவல் தொழில்நுட்பத்துறையின் தலைவரான அமித் மாளவியாவைப் பாதுகாப்பதற்காக 24 மணி நேரத்திற்குள்ளாக மூன்று கட்டுரைகளை எழுதிய அர்னாப் வைக்கின்ற இத்தகைய குற்றச்சாட்டுகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. உண்மைகளோடு அர்னாப்பிற்கும், அவருடைய ரிபப்ளிக் டிவிக்கும் உள்ள தொடர்புகளை நினைவுபடுத்திக் கொண்ட நாங்கள், அர்னாபின் கத்தல்கள் எவ்வித ஆதாரமும் அற்றவை என்பதற்கான பத்து சமீபத்திய உதாரணங்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.

1. மோடியின் கல்வித் தகுதி குறித்து சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்கள் உலா வருகின்றன.

2. போலிச் செய்திகளை அடிப்படையாக கொண்டு காங்கிரஸ் ட்விட்டர் கைப்பிடி கணிப்புகளை நடத்துகிறது.

3. பஞ்சாப் தேசிய வங்கி ஊழல் பின்னடைவு குறித்து தேசிய ஹெரால்டு பத்திரிகை ட்விட்டர் கணிப்பு

4. உண்மைக்கான சோதனை: கர்நாடகாவில் 7 லட்சம் கிராமங்கள் உள்ளன என்று மோடி கூறினாரா?

5. உண்மைக்கான சோதனை: இந்தியாவில் சொத்துக்களில் சமத்துவமின்மை குறித்த ராகுல் காந்தியின் கூற்று

6. நீதிபதி லோயாவின் மகனுடைய செய்தியாளர் கூட்டத்தை அமித் ஷா ஏற்பாடு செய்தார் என்று சமூக ஊடகங்கள் கூறுவதில் உண்மை இருக்கிறதா?

7. உண்மைக்கான சோதனை:  கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறும் நாட்கள் தொடர்பாக அமித் மாளவியாதான் முதலில் ட்வீட் செய்தாரா?

8. பாஜக தகவல் தொழில்நுட்பத்துறையின் தலைவர் அமித் மாளவியா பற்றி டைம்ஸ் நவ் தவறான தகவல்களைப் பரப்புகிறது

9. பாஜக எம்.பி விடுத்த அறிக்கையின் காரணமாக சோலார் பேனல்கள் சேதப்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் சேனல்கள் போலிச் செய்திகளைப் பரப்பின.

10. நரேந்திர மோடி உலகின் இரண்டாவது மிக ஊழல் நிறைந்த பிரதமராக இருக்கிறார் என்பதாக போலிச் செய்தி ஒன்று கூறுகிறது.

அன்பு அர்னாப், நீங்கள் ஆல்ட் நியூஸில் வெளியாகின்ற அனைத்து உண்மையறியும் செய்திகளும் ஒருபக்கம் சார்ந்து இருப்பதாக தவறான குற்றச்சாட்டை முன்வைத்து, “அவ்வப்போது” மற்ற பக்கத்திலிருந்து வருகின்ற செய்திகளையும் நாங்கள் வெளியிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடைய கூற்று உண்மை இல்லை என்பதற்காக நாங்கள் வெளியிட்ட பத்து செய்திகளை உங்களுக்குச் சுட்டிக் காட்டியுள்ளோம். இப்போது இங்கே உங்களுக்கான கேள்வி: மத்திய அரசிற்காக வாதாடவில்லை என்பதற்கு இது போன்று சமமான எண்ணிக்கையிலான நிகழ்வுகளை நீங்கள் எங்களுக்கு காட்ட முடியுமா? எதிர்க்கட்சித் தலைவர்கள், தாராளவாதிகள் மற்றும் எதிர்க் குரல்களை நீங்கள் கேள்வி கேட்பதைப் போல, அதிகாரத்தில் இருப்பவர்களைப் பற்றிக் கேள்வி எழுப்புகின்ற வகையில் இருக்கும் உங்களுடைய 10 ஹேஸ்டேக்குகள், 10 கருத்துக்கணிப்புகள், 10 வீடியோக்களை எங்களுக்கு காட்டுங்கள். ஏனென்றால், ஆல்ட் நியூஸிற்கு நீங்கள் என்ன பரிந்துரைத்தீர்களோ, அவை உங்களுக்கும் பொருந்துவதாகவே இருக்கும்.

இங்கே ஆல்ட் நியூஸிலிருந்து உங்களுக்கு ஒரு செய்தி (உங்கள் வார்த்தைகளையே மாற்றித் தந்திருக்கிறோம்): தேசிய செய்திச் சேனல்கள் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துபவையாக இருக்க வேண்டும், எப்போதுமே அப்படி இருக்கவில்லை என்றாலும், எதிர்க்கட்சிகள், தாராளவாதிகள், ஜேஎன்யூ மாணவர்களுக்குப் பதிலாக அவ்வப்போதாவது அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்கும் வகையில் இருப்பதற்கு முயல வேண்டும். தொடர்ந்து பாஜகவிற்காக வாதாடுபவராக நீங்கள் இருக்கக்கூடாது, ஏனெனில் அவ்வாறு நீங்கள் இருக்கும்பட்சத்தில் உங்களுடைய நற்சான்றுகள் கேள்விக்குள்ளாகும்.

நன்றி: https://www.altnews.in/alt-news-responds-to-arnab-goswamis-hilarious-rant/

– தமிழில்: முனைவர்.தா சந்திரகுரு, விருதுநகர்.

Leave a Reply

You must be logged in to post a comment.