===எம்.கண்ணன், என்.ராஜேந்திரன்===
ஸ்மார்ட்போன்களை பேசுவதற்கு மட்டுமின்றி கேம்ஸ் விளையாடவும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சாட் செய்வதற்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். கால வரையறையின்றி கைபேசிகளை பயன்படுத்துவதால் கழுத்து மற்றும் கை விரல் நரம்புகள் வலுவிழக்கும் என்றும் குறிப்பாக கைபேசி திரையையே தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கண்கள் சோர்வடைந்து விடுவதும், இந்நிலை தொடரும்பட்சத்தில் காலப்போக்கில் பார்வையிழப்பிற்கு வழிவகுத்துவிடக்கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கண்களைப் பாதுகாக்க வழிகள்
கணினித்திரையின் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்தும் ஆண்ட்டி கிளார் கண்ணாடிகளை ஃபோன் திரையில் ஒட்டலாம். இக்கண்ணாடிகள் விலை அதிகம் என்று தோன்றினால் வெளிச்சத்தைக் குறைக்கும் புளூலைட் ஃபில்டர் (Bluelight Filter for Eye Care) என்ற ஆப்பை பயன்படுத்தலாம். இந்த ஆப் பிளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. ஆப் கொண்டு வெளிச்சம் குறைப்பது என்பது தற்காலிக வழிமுறையே. கண்ணாடிகளைப் பயன்படுத்தி குறைப்பதுதான் சரியான தீர்வு என்பதை நினைவில் கொள்ளவும்.

கண்கள் சோர்வடைவதாகத் தோன்றினால் உடனடியாக சாதாரண தண்ணீர் கொண்டு கண்களைக் கழுவவும். இதனை ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் மட்டுமல்ல டெஸ்க்டாப், லேப்டாப் போன்ற கணினிகளைப் பயன்படுத்துவோரும் அடிக்கடி செய்து கொள்ளவேண்டிய பாதுகாப்பு முறைதான்.மனிதர்களின் கண்கள் அருகில் இருப்பதைப் பார்க்கும்போது ஒருவிதமாகவும், தூரத்தில் இருப்பதைப் பார்க்கும்போது வேறு விதமாகவும் செயலாற்றும் தன்மை பெற்றது. இந்த மாற்றத்தை புத்தகங்களை வாசிக்கும்போது நீங்கள் உணர்ந்திருக்கக்கூடும். இருப்பினும் ஸ்மார்ட்போன் திரைகளை குறைந்த துரத்தில் அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர்த்து குறைந்த பட்சம் 20 நிமிடத்திற்கு ஒருமுறை குறைந்தது 20 அடி தூரத்தில் உள்ளவற்றை 20 விநாடிகளாவது பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். இதனை மருத்துவ ஆய்வாளர்கள் 20/20/20 விதிமுறை என்று குறிப்பிடுகின்றனர்.
பொதுவாக ஃபோன் திரையை கண்களுக்கு அருகே குறைந்த தூரத்தில் வைத்துக் கொண்டு பயன்படுத்துவது நல்லதல்ல. குறைந்தது 16 முதல் 18 இன்ச் தூரத்தில் அதாவது ஒன்றரை அடி தூரத்தில் வைத்துப் பயன்படுத்துவதே நல்லது.

அடுத்ததாக, போனின் வெளிச்சத்தை குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இல்லாமல் நம் கண்களுக்கு உறுத்தாத அளவில் சரி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அதேபோல போனில் உள்ள எழுத்துக்கள், ஐகான்கள் மிகச் சிறியதாக இல்லாமல் நன்கு தெரியும்படியாக பெரிய அளவில் அமைத்துக் கொள்வது நல்ல பார்வைத் திறனுக்கு உதவியாக இருக்கும்.
ஃபோன் திரையை கீறல் மற்றும் அழுக்குப் படியாமல் சுத்தமாக வைத்திருக்கவும். கறைகள், கீறல்கள் இருப்பதன் காரணமாக கண்கள் உற்றுப் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படும். எனவே மெல்லிய சுத்தமான துணியால் அவ்வப்போது ஃபோனின் திரைப் பகுதியை துடைத்து பளிச்சென்று வைத்துக் கொள்ளவும்.மேற்கண்ட குறிப்புகளை பின்பற்றினால் கண் தொடர்பான பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே ஓரளவு தவிர்த்துவிடலாம். இருப்பினும் கண்களைப் பாதுகாக்க இந்த குறிப்புகள் மட்டுமே போதுமானதல்ல. சத்தான உணவு, ஸ்மார்ட்போனின் அவசியமற்ற பயன்பாட்டைக் குறைப்பது போன்ற பிறவும் கவனத்தில் கொள்ளவேண்டியவையே.

Leave a Reply

You must be logged in to post a comment.