காங்கயம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காங்கயம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சியினை சேர்ந்தோர் கைது செய்யப்பட்டனர்.

காங்கயத்தில் அனைத்து அரசியல் கட்சியினரின் ஆலோசனை கூட்டம் மாநில திமுக இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து , சென்னிமலை ரோடு ஸ்ரீ ஹால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கடைவீதி வழியாக காங்கயம் தபால் நிலையத்துக்கு பூட்டு போட அனைத்து கட்சியினர் நடை பயணமாகச் சென்றனர். இவர்களை காங்கயம் பேருந்து நிலையம் ரவுண்டான அருகே காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் அவ்விடத்திலேயே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், காங்கயம் தாலுகா செயலாளர் எஸ்.திருவேங்கடசாமி, திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப.கோபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னுசாமி, ஆதிதமிழர் பேரவை மாவட்ட தலைவர் பொன்செல்வம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட அமைப்பளார் ஜான்நாக்ஸ், மதிமுக வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கந்தசாமி உள்பட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.