சிம்லா:
மும்பையில் நடந்த வரலாறு காணாத விவசாயிகளின் நெடும்பயணத்தை தொடர்ந்து இமாச்சல பிரதேச விவசாயிகளும் புது வரலாறு படைக்கப் புறப்பட்டுவிட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் செவ்வாயன்று முற்பகல் 11 மணிக்கு சட்டமன்றத்தை முற்றுகையிட விவசாயிகளின் பேரணியாக புறப்பட்டனர்.அனைத்து சிறு விவசாயிகளுக்கும் ஐந்து ஏக்கர் விவசாய நிலம் வழங்க வேண்டும், குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டங்கள் அமலாக்க வேண்டும், ஆப்பிள் உள்ளிட்ட சாகுபடிகளை வெட்டி அழிப்பதை கைவிட வேண்டும், விவசாயிகளின் வீடுகளும், சாகுபடி நிலங்களும் அரசால் கையகப்படுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும். நாசப்படுத்திய சாகுடிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வேலை உறுதி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பால் லிட்டருக்கு ரூ.30 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சட்டமன்ற முற்றுகை நடைபெற்றது.

மாநில மக்களில் 60 சதவீதமானோர் விவசாயிகள் மற்றும் அதைச்சார்ந்து வாழ்கின்றனர். ஆனால் 11 சதவீதம் நிலம் மட்டுமே விவசாயத் தேவைகளுக்கான பயன்பாட்டில் உள்ளன. எனவே, இமாச்சல் பிரதேச விவசாயிகள் வேறு வழியில்லாமல் வனநிலத்தில் சாகுபடி செய்து வருகிறார்கள். பெரும்பான்மையான சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் இதுபோன்ற வனநிலங்களை நம்பியே வாழ்ந்து வருகிறார்கள்.ஆனால், சாகுபடி செய்த விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரிக்கும் அரசு அவர்களை சாகுபடி நிலத்திலிருந்து வெளியேற்றுவதை அன்றாட நடவடிக்கையாக மேற்கொண்டு வருகிறது. அதோடு விளைச்சலில் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு மரங்களையும் முறித்து வருகிறது அரசு.

ஒரு லிட்டர் பாலுக்கு கிடைக்கும் 15 ரூபாயை வைத்து எப்படி வாழ்க்கை நடத்த முடியும் என பால் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.30 நியாய விலை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கேட்டு விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டம், நாட்டை உலுக்கிய மும்பை நெடும்பயணம் அளித்துள்ள உத்வேகம் இமாச்சல பிரதேச விவசாயிகளை போராட்டக்களத்திற்கு தயார்ப் படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: