பழனியில் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேட கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழனி வேலாயுதசாமி மட தர்மத்துக்கும், திருமாலைக் கட்டளைக்கும் எழுதப்பட்டது இந்த செப்பேடு. புழனியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தம்மிடம் உள்ள செப்பேட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம் கொடுத்து படித்து காண்பிக்கக் கோரினார்.

செப்பேட்டை ஆய்வு செய்த நாராயணமூர்த்தி கூறும் போது,
தமிழ்பொறிப்புடன் உள்ள இந்த செப்பேடு 36.4 செ.மீ உயரமும், 20.2 செ.மீ அகலமும 870 கிராம் எடையும் கொண்டது. அச்செப்பேட்டில் சாலிவாகன சகாப்தம் 1627ம் ஆண்டு அதாவது கி.பி.1705ம் ஆண்டு, பார்த்திப ஆண்டு சித்திரை மாதம் 30ம் தேதி எழுதப்பட்டது. ரகுநாதசேதுபதியின் ஆட்சி காலத்தில் அவரது மகன் ரெணசிங்க தேவரவர்கள் கட்டளைப்படி மருதப்பிள்ளை எழுதிய மூல தாமிர சாசனப் பட்டயத்தின் நகல் தான் இந்த செப்பேடு. இந்த நகல் பட்டயத்தை சிவகெங்கைச் சீமையின் 2ம் அரசரான முத்துவடுகத் தேவர் மற்றும் அவரது மனைவி வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோருக்கு காரிய கர்த்தராக இருந்த புகழ்பெற்ற தாண்டவராயப்பிள்ளையின் கட்டளை மற்றும் உதவியோடு திருப்பத்தூர் பழனி ஆசாரி மகன் முத்தாண்டி என்பவர் எழுதியுள்ளார்.

மூலப்பட்டயம் எழுதப்பட்டு 50 அண்டுகள் கழித்து மீண்டும் இந்த நகல் பட்டயம் எழுதப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் சிவகெங்கைப் பகுதிகளைச் சேர்ந்த77 ஊர்களைச் சேர்ந்த 36 சாதிக்காரர்கள் ஒன்று கூடி அரச கட்டளைப்படி இந்த பட்டயம் எழுதப்பட்டுள்ளது. பழனி மலையில் இந்த புராணம் வாசிக்கும் சோழநாட்டு வடமுட்டத்தைச் சேர்ந்த ஏகாம்பர உடையாருக்கு மடம் ஒன்றை கட்டி வைத்து பூசை நடத்துவதற்கான ஏற்பாட்டிற்றாக இந்த செப்பேடு பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டிற்கு அரண்மனையில் வசிக்கும் ராஜ வம்சத்தார் ஆண்டு ஒன்றுக்கு 5 பொன்னும் ஒரு துப்பட்டியும் மற்ற கிராமங்களில் உள்ளவர்கள் குடி ஒன்றுக்கு (சாதி ஒன்றுக்கு) 6 பணமும் கொடுப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அத்துடன் வீரபத்திரன், ரெணசிங்கம் பிள்ளை,தாண்டவராயப்பிள்ளை ஆகியோர் முருகக் கடவுளுக்கும், திருமாலைக் கட்டளைக்கும் ஆண்டு ஒன்றுக்கு ஒரு பொன்னும், 2 பணமும், கொடுப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.