அமிருதசரஸ்: இராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களில் 38 பேரின் உடல் திங்களன்று இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இராக்கின் மோசுல் நகரில் துப்பாக்கிகளுடன் நுழைந்த இஸ்லாமிக் ஸ்டேட்ஸ் எனப்படும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு அப்பகுதி முழுவதையும் தன்வயப்படுத்திக்கொண்டது. இதனையடுத்து அங்கு கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த இந்தியர்களையும் வங்க தேசத்தவர்களையும் பிணைக்கைதிகளாக அந்த அமைப்பினர் பிடித்து சென்றனர். இதில் இந்தியாவை சேர்ந்த 40 பேரும் துணி ஆலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். இந்த அமைப்பினரிடமிருந்து தப்பி வந்த பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரை சேர்ந்த ஹர்ஜித் மாஷி கடந்த 2015 ஆண்டே 39 இந்தியர்களையும் ஐஎஸ் பயங்கரவாதிகள் காட்டுப்பகுதிக்குள் வைத்து சுட்டு கொன்றதாக தெரிவித்தார்.

ஆனால் இதனை வெளியுறவுத்துறை அமைச்சகம் அப்போது மறுத்துவிட்டது. இதனையடுத்து கடந்த 2017 ஆம் தேதி இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது உறுதியான தகவல் கிடைக்கும் வரை அவர்கள் இறந்துவிட்டதாக கூறமாட்டோம் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். இதற்கிடையே கடந்த மார்ச் 20 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ் இராக்கில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 பேரும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். இது நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் மோசுல் நகருக்கு அருகில் உள்ள பாதோஷ் கிராமத்தில், அவர்கள் புதைக்கப்பட்டிருந்தது, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனைகள் மூலம், கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்த சுஷ்மா, “39 பேரும் சுடப்பட்டு, பின், புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மீட்கப்பட்ட உடல்களில், 38 உடல்கள், மரபணு சோதனையில் யார் யாருடையவை என, உறுதி செய்யப்பட்டுள்ளன. ஒருவரது உடல், 70 சதவீதம் வரை உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து 38 இந்தியர்களின் உடல்களை கொண்டு வர ஞாயிறன்று வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் இராக் சென்றார். பின்னர் திங்களன்று பாக்தாத்தில் இருந்து 38 பேரின் உடல்களும் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.சிங் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் உறவினர்கள் சவப்பெட்டிகளை திறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் சவப்பெட்டிகளை திறந்து பார்க்க வேண்டாம் என்று கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றர்.

Leave a Reply

You must be logged in to post a comment.