வானொலியை மார்கோனி கண்டுபிடித்த காலம் முதல் இன்று வரை வானொலிப் பெட்டிகளும் ஒலிபரப்பு நுட்பங்களும் பல பரிணாம வளர்ச்சிகளைக் கண்டுள்ளன. வானொலிப் பெட்டியின் வால்வுகளின் அளவு மிகப்பெரியதாக இருந்த காரணத்தால் வானொலி ஆரம்பித்த காலத்தில் வானொலிப் பெட்டியின் அளவு மிகப்பெரியதாக இருந்தது, ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியால் வால்வுகளின் இடத்தை சிறிய மின்னணு அட்டைகள் (இன்டகிரேட்டட் சர்க்யூட்ஸ்) பிடித்தன. இதனாலேயே வானொலி பெட்டியின் அளவும் குறைய துவங்கியது என்று நாம் கூறலாம்.

பிற்காலத்தில் மின்னணு அட்டைகளும் மாறி நானோ அட்டைகள் பயன்பாட்டிற்கு வந்து செல்பேசிகளிலும் வானொலி இடம்பெற வழிவகுத்தது. இப்படி வானொலி பெட்டிகள் மட்டுமல்லாது ஒலிபரப்பிகளும் பல்வேறு மாற்றங்களை கண்டது, மிகப்பெரிய அறையில் அதிகப்படியான குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்ட ஒலிபரப்பி நிலையங்கள் விஞ்ஞான வளர்ச்சியால் சிறியதாக ஒரே அறையில் குறைந்த குளிர் வசதியுடன் பணியாற்ற வடிவமைக்கபட்டது.

ஆரம்பகாலத்தில் வானொலி நிலையங்கள் தங்கள் ஒலிபரப்பை வானலைகள் வழியாக செய்துவந்தன, பின் செயற்கைகோள்கள் அதிகமாக விண்ணில் செலுத்தியதன் காரணமாகவும் தங்களின் ஒலிபரப்பு அதிக தூரம் துல்லியமாக கேட்கவேண்டும் என்ற நோக்குடன் வொர்ல்ட்ஸ்பேஸ் என்ற செயற்கைகோள் வானொலி ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் அந்த வானொலிப் பெட்டியின் விலை சுமார் 4,000 ருபாயிலிருந்து 20,000 ருபாய் வரையில் இருந்த காரணத்தாலும், ஒவ்வாரு வருடமும் 2,000 ரூபாய் சந்தாவாக செலுத்த வேண்டியிருந்தாலும் அத மக்களிடையே மவுசு பெறவில்லை.

சில வருடத்திற்கு முன் இணையம் வளர்ச்சி அபரிவிதமான வளர்ச்சியை அடைந்ததால் “இணைய வானொலிகள்” பரவத் தொடங்கின. இந்த வானொலி நிலையங்கள் மிக குறைவான செலவில் தங்கள் ஒலிபரப்பினை செய்துவந்தாலும் இந்த வானொலிகளை கேட்க அதற்கான செயலிகள் தேவை என்பது இதன் ஒரு குறையாக உள்ளது. இணையத்தில் “டியூன் இன்”  செயலி மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த செயலியின் மூலம் உலகத்தில் உள்ள நிறைய வானொலிகளின் ஒலிபரப்பினை கணிப்பொறியின் இணையம் வழியாகவும் செல்பேசிகளின் இணையத்தை உபயோகித்தும் கேட்கலாம் என்பதே இதன் சிறப்பு.

செல்பேசி நிறுவனங்கள் தாங்கள் வழங்கிவந்த இணைய சேவையின் கட்டணத்தை குறைத்ததன் காரணமாக வாட்சப் பயன்பாடு அதிகரிக்க துவங்கியது. இது வாட்சப் வானொலி நிலையங்கள் புறப்பட வழிவகுத்தது. இந்த வாட்சப் வானொலிகளுக்கு முன்பே குறுந்செய்திகள் மூலம் வானொலிகளை பற்றி தகவல்களை “மின்னக்கல்” என்ற பெயரில் செல்வராஜ் என்ற வானொலி நேயர் வழங்கிவந்தார். இந்த சேவையை வாட்சப் வானொலிகளின் முன்னோடியென்று கூறலாம்.தற்போது சில நேயர்கள் தங்களின் ஆர்வத்தால் வாட்சப் வானொலி ஆரம்பித்துள்ளார்கள், இது தற்போது நேயர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்றால் அது மிகையாகாது. இந்த வானொலிகளில் பாடல்கள் மட்டுமல்லாது பல வகையான நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பிவருகின்றன.

இந்த வானொலிகளில் இப்படி நிறைகள் பல இருந்தாலும் சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன, உதாரணத்திற்கு ஒவ்வொரு பாடலையும் நிகழ்ச்சிகளையும் நாம் பதிவிறக்கிய பின்னர்தான் கேட்கமுடியும். ஆகவே இதற்கு நாம் பயன்படுத்தும் இணைய அளவு அதிகமாக இருக்கவேண்டும்.இப்படி வானொலி நிலையங்களும், ஒலிபரப்பிகளும், வானொலி பெட்டிகளும் பல்வேறு பரிணாம வளர்ச்சியினை கண்டுள்ளன. இன்னும் வரும் காலகட்டங்களில் இது எவ்வாறு மாற்றத்தினை காண்கிறது என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

  • ந. அருண் குமார்

Leave a Reply

You must be logged in to post a comment.