திருநெல்வேலி, ஏப். 1-
8 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்லம்-செங்கோட்டை வழியாக சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். தமிழக –கேரள மாநிலங்களை இணைக்கும் செங்கோட்டை –புனலூர் இடையே மீட்டர் கேஜ் பாதையில் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பாதை கடந்த 2010 ஆம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வந்தது. ரூ.350 கோடி செலவில் இந்த பணிகள் சமீபத்தில் முடிக்கப்பட்டு அகல ரயில் பாதை போக்குவரத்துக்கு தயார் ஆனது.இதையடுத்து எப்போது ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று தமிழகம் மற்றும் கேரளா மாநில பயணிகள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.முதற்கட்டமாக பாசஞ்சர் ரயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தென்னக ரயில்வே சார்பில் சென்னை தாம்பரத்தில் இருந்து தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

கேரள எம்பிக்கள் வரவேற்பு:
வெள்ளிக்கிழமை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 5.55 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையத்துக்கு அந்த ரயில் வந்தது. இதையொட்டி கேரளா மாநிலத்தை சேர்ந்த கொல்லம் மற்றும் கொட்டாரக்கரை எம்.பி.க்கள் கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் பிரேமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான பயணிகள் சனிக்கிழமை காலை செங்கோட்டை ரயில் நிலையத்தில் திரண்டனர். அவர்கள் தாம்பரத்தில் இருந்து வந்த சிறப்பு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அந்த ரயில் தொடர் பயணத்தை எம்.பி.க்கள் தொடங்கி வைத்தனர். மேலும் அதே ரெயிலில் பொது பெட்டியில் ஏறி அவர்கள் கொல்லம் வரை பயணம் செய்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாதது பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து சிறப்பு ரயில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பகவதி புரம், தென்மலை, எடமண், புனலூர், கொட்டாரக்கரை வழியாக கொல்லத்துக்கு காலை 10.30 மணிக்கு சென்றடைந்தது.

மறுவழித்தடத்தில் இந்த ரயில் சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டது. மாலை 5.15 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையத்துக்கு வந்தது. தொடர்ந்து தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் வழியாக சென்னை தாம்பரத்துக்கு சென்றது.8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்பட்டு இருப்பது குறித்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தற்போது இயக்கப்படும் தாம்பரம்–கொல்லம்–தாம்பரம் சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். இங்கு மீட்டர் கேஜ் பாதை இருந்த போது இந்த வழித்தடத்தில் அதிகமான ரயில்கள் இயக்கப்பட்டன. அதே போல் நெல்லை –கொல்லம் பாசஞ்சர் ரயில், மதுரை –கொல்லம் பாசஞ்சர் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: