சுற்றுகிற பூமியை

சுழட்டி விட்டதாரு?

சூரியனை சாயங்காலம்

ஒளிச்சு வெச்சதாரு?

வெண்ணிலவை சோப்பு போட்டு

வெளுத்து வெச்சதாரு?

விண்மீனில் திரியை போட்டு

கொளுத்தி வெச்சதாரு?

மின்னல் வெட்டி கிழிஞ்சவானம்

மீண்டும் தெச்சு விட்டதாரு?

வலிச்சழுத வானத்துக்கு

வைத்தியந்தான் செஞ்சதாரு?

அலைஞ்சு திரியும் மேகத்துக்கு

அலுப்பு மருந்து கொடுத்ததாரு?

நனைஞ்சு நடுங்கும் மரத்துக்கு

தலை துவட்டி விடுவதாரு?

தொந்தி பெருத்த மலைகளுக்கு

பொங்கி சோறு போட்டதாரு?

அருவியினை அழைத்து வந்து

ஆற்றில் இறக்கி விட்டதாரு?

வானவில்லில் ஏழு வண்ணம்

தீட்டி வெச்சதாரு?

வாசனையை பூவிதழில்

பூட்டி வெச்சதாரு?

நீந்திக் குளிக்கும் அலைகளுக்கு

நீச்சல் சொல்லி கொடுத்ததாரு?

கருசுமக்கும் விதைகளுக்கு

பேறுகாலம் சொன்னதாரு?

இறைவன் வந்து படைச்சதென

நம்ப வெச்சதாரு?

இயல்பாவே இருப்பதுதான்

இயற்கையின்னு பேரு!

Leave a Reply

You must be logged in to post a comment.