ரஜினி கிரிஷ் (முத்துக்கிருஷ்ணன்) ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரையில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த விமான சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், 2 மாணவர்களுக்கு விமானத்தில் பயணிப்பதற்கான இலவச அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தச் செய்திகள் விமானத்தில் முதல்முறையாகப் பயணம் செய்த ஒரு மாணவரின் முகநூல் பதிவை நினைவூட்டுகின்றன.

நினைவுகூர்வதற்கான முக்கியக் காரணம் அவர் இப்போது உயிரோடு இல்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் பயின்று வந்தவர் முத்துகிருஷ்ணன். கடந்த ஆண்டு மார்ச் 13 அன்று தில்லியில் தனது தென்கொரிய நண்பர் ஒருவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட அவர் சேலத்தைச் சேர்ந்தவர்.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்றபோது ரோஹித் வெமூலாவுடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தார், வெமூலாவின் மரணத்தையொட்டி நடைபெற்ற போராட்டங்களில் மிகுந்த எழுச்சியுடன் கலந்து கொண்டவர். தன்னுடைய ஆங்கில அறிவை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருந்த முத்துக்கிருஷ்ணன் தான் படித்த ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், ஜேஎன்யூ மற்றும் அவரது குடும்பச் சூழல் என்று அனைத்தையும் பற்றிய தன்னுடைய அனுபவங்களை ரஜினி கிரிஷ் என்ற புனைப்பெயரில் தனது முகநூல் பக்கங்களில் ஆங்கிலத்திலேயே பதிவு செய்துவந்தார். தன்னுடைய முதல் விமானப் பயண அனுபவங்கள் குறித்த, இறப்பதற்கு 7 மாதங்கள் முந்தைய இந்த முகநூல் பதிவில், விமானத்தில் பயணம் செய்ய ஆர்வம் கொண்ட முத்துக்கிருஷ்ணன் சேலம் விமானநிலையத்திற்கு 28 கி.மீ சைக்கிளில் சென்றதைக் குறிப்பிட்டிருக்கிறார். ரஜினி கிரிஷ்2016 ஆகஸ்ட் 07

முதன்முதலாகப் பறந்த போது மதியம் 2 மணி சென்னையில் ஒரு கட்டிடத்தில் பெயிண்டராக வேலை பார்த்த சமயம் அது.. மதிய உணவிற்குப் பிறகு நீலாங்கரை கடற்கரையில் அமர்ந்திருந்தேன். என் தலைக்கு மேலாக ஒரு விமானம் கடந்து சென்றதை முதன்முறையாகப் பார்த்தேன். இந்த இயந்திரப் பறவையை என்னுடைய வாழ்நாளில் ஒருமுறைகூட என்னால் பயன்படுத்த முடியாது என்று நான் அப்போது நினைத்துக் கொண்டேன். நான் அப்போது கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். “அன்பான கடவுளே எனக்கு இன்னொரு பிறப்பு இருந்தால், என்னை ஒரு பறவையாகப் படைத்துவிடு. நான் உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும். இந்த உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பகுதியை நான் பார்க்கும் வரையிலும் சோர்வடைய விரும்பவில்லை என்பதால், எனக்கு தயவு செய்து மூன்று அல்லது நான்கு இறக்கைகளைச் சேர்த்துக் கொடுத்து விடு.” என் சேமிப்புப் பணம் ரூ.2,500 எடுத்துக் கொண்டு ஒரு முறை நான் சேலம் ஓமலூர் விமான நிலையத்திற்கு சைக்கிளில் (28 கிமீ) சென்றேன், சென்னைக்கு செல்லக்கூடிய ஒரே ஒரு விமானம் மட்டுமே அப்போது இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அரசியல்வாதிகளே அனைத்து டிக்கெட்டுகளையும் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

ஒருமுறை என் பெற்றோரிடம், “என் நண்பர்கள் எல்லோரும் விமானத்தில் பறக்கிறார்கள், நானும் அவ்வாறு பறப்பதற்கு நீங்கள் ஏன் எனக்குப் பணம் தரக் கூடாது” என்று கேட்டேன். அதற்கு என் தந்தை, “உனக்கு அவ்வளவு பணத்தை எங்களால் தர முடியாது, ஆனாலும் நாங்கள் உன்னை நல்ல விதமாகப் பெற்று, நல்ல உடல்நலத்தைக் கொடுத்திருக்கிறோம். நீ வேலை செய்து உன்னுடைய சொந்தப் பணத்தில் பறந்து கொள்” என்றார்.

சமீப காலமாக தங்கள் பெற்றோரின் பணத்தைக் கொண்டோ அல்லது மக்களின் பணத்தைப் பயன்படுத்தியோ பலரும் உள்ளூர் புறநகர் பேருந்தைப் போல விமானத்தில் பயணிப்பதைப் பார்த்து வருகிறேன். ஆனால் என் சொந்தப் பணத்தைக் கொண்டு எப்போதாவது ஒருமுறையாவது பறக்க வேண்டும் என்றே எப்போதும் நான் எண்ணி வந்தேன். இதோ இப்போது என்னுடைய இங்கே, கனவு நனவாகி இருக்கிறது. ஆய்வுத் திட்டத்தில் பணியாற்றிய எனக்குப் போதுமான பணம் கிடைத்தது, நான் முதன்முறையாக விமானத்தில் சென்றேன். ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு. இரண்டு முறை மட்டுமே நான் என் முகத்தை ஜன்னல் பக்கமிருந்து திருப்பினேன். முதல் முறை இந்த செல்பி எடுப்பதற்காக.

விமானம் ஓடுபாதையில் ஓடியது, மெதுவாக அதன் வேகம் அதிகரித்தது, விமானம் தரையில் இருந்து மேலே ஏறியபோது என் வயிற்றில் 1000 எலிகள் ஓடுவதைப் போன்று உணர்ந்தேன், கொஞ்சம் பயமாக இருந்தாலும், என் கண்களை மூடிக் கொள்ள நான் விரும்பவில்லை. அதற்குப் பிறகு நான் நன்றாக சுவாசித்தேன். திருப்தியடைந்தேன் … ஓ…. நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்.. சிறிது நேரத்தில் பூமியிலுள்ள நட்சத்திரங்களை நான் பார்த்தேன். ஓ ஓ… அனைத்தும் மனிதர்களின் சொந்த இடத்திலிருந்து வருகின்ற செயற்கையான விளக்குகள். பின்னர் விமானம் அடுத்த கட்டத்திற்குப் பயணித்தது. இப்போது முழுவதும் வெள்ளையாக இருந்தது. முற்றிலும் அமைதியாக இருந்தது. எந்த இடம் என்று நான் அடையாளம் காண முடியாது மர்மமாக இருந்தது, அனைத்தும் மேகத்திற்கு மேலே இருந்தது. உண்மையான பறவைகளைக் கொன்ற வேறு சில இயந்திரப் பறவைகள் தவிர வேறு யாரும் அங்கே இருக்கவில்லை, அந்த மேகங்கள் மீது இறங்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அங்கிருந்து திரும்பி வர நான் விரும்பவில்லை.சூரிய உதயம் வரை வெண்மையாக இருந்த மேகம் பின்னர் தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொண்டது. முதலில் அது இளம் சிவப்பு, மஞ்சள் கலந்த கதிர்களுடன் இருந்தது. பின்னர் அது முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிட்டது … ஏதாவது குளிர்ச்சியாக குடிக்க வேண்டும் என்பதாக நான் உணர்ந்தேன்.

இப்போது விமானப் பணிப்பெண் என்னை அழைத்து, “சார் உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்ட போது, இரண்டாவது முறையாக நான் என் முகத்தை ஜன்னல் பக்கமிருந்து திருப்பினேன், நான் விலைப்பட்டியலைப் பார்த்தேன், எல்லாமே 100 ரூபாய்க்கு மேல் இருந்தது. 120 மிலி டீ கூட “இலவசமாக எனக்கு கொடுப்பது போன்று ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?” என்று நான் அவரிடம் கேட்டேன், அவர் “தண்ணீர் தான் உங்களுக்கு நான் கொடுக்க முடியும் சார்” என்றார். என் ஆர் எஸ் மெஸ் தண்ணீர் இருந்த என்னுடைய தண்ணீர் பாட்டிலைக் காட்டி, சிரித்துக் கொண்டே “என்னிடம் நிறைய தண்ணீர் இருக்கிறது மேடம், நன்றி. மகிழ்ச்சி” என்று சொன்னேன்.

இந்த முதல் விமானப் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி அன்பு டிக்கன்ஸ் லியோனார்ட் எம். இந்த வாய்ப்பிற்கு நன்றி தலைவா: சுதிப்தோ மோன்டல், துஷார் கடாகே கொங்க்பிராய் கோங், மாத்ரா சிரினிவாஸ், கூரிய பிரகாஷ் குப்தா தோங்கம், பிபின் ரமேஷ், தீராவத் வைட்டி காட் நீங்கள் அனைவரும் நமது ‘கபாலி’ படத்தைப் பார்த்த பிறகு, இந்த முதன்முறை விமானப் பயணத்திற்கு என்னை அனுப்பி வைத்ததற்கு நன்றி. . .

  • தமிழில்: முனைவர் டி. சந்திரகுரு

Leave a Reply

You must be logged in to post a comment.