வடசித்தூர், ஏப். 1-
பொள்ளாச்சி அருகே வடசித்தூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகா வடசித்தூர் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பொள்ளாச்சி அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ,வடசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பகுதி பொதுமக்கள் ஞாயிறன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி மற்றும் வாலிபர் சங்கத்தின் தாலுகா பொருளாளர் திலீபன், வடசித்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி காவல் துறை துணை கண்காணிப்பாளர் முத்துச்சாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பொதுமக்கள் மற்றும தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஓருமாத காலத்திற்குள் குடிநீர் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படுமென உறுதியளித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.